Wednesday 7 February 2018

இந்துக்களை இணைத்தார் வைரமுத்து!


இந்துக்களை அவமானம் செய்தவர் ஈ.வெ.ரா. பரிகாசம் செய்தவர் கருணாநிதி. கண்டனம் செய்து பிழைப்பு நடத்துபவர் கி.வீரமணி. ஆனால் அவர்களின் இந்து விரோத வழியில் வந்தாலும், தற்போது தமிழக இந்துக்களை ஒரு வகையில் இணைத்தவர் கவிஞர் வைரமுத்து. அவர் செய்த ஆண்டாள்-அவதூறின் நல்லதொரு பக்க விளைவை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா? மதப் பற்று கிடையாதா? பரவாயில்லை. உங்கள் நம்பிக்கை இன்மையை தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சுதந்திரத்தை உங்களுக்கு கொடுப்பது அடிப்படை ஜனநாயகப் பண்பு – அதாவது கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பண்பு - என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். 

ஒரு ஜனநாயக சமூகத்தில், கடவுளை நம்புகிறவர்கள் நாத்திகவாதிகளை அவமதிக்கலாம், தண்டிக்கலாம், மனம் மாற நிர்பந்திக்கலாம் என்று யாரும் சொல்ல முடியாதே! அதே ரீதியில், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நாத்திகவாதிகள் காண்பிக்க வேண்டிய ஜனநாயகப் பண்பும் உண்டல்லவா? முன்னதை வரவேற்று பின்னதை மறுத்தால் என்ன அர்த்தம்? அகங்காரம்,  திமிர், சிந்தையில் ரௌடித்தனம் என்று அவரவர் கோபத்துக்கு ஏற்ப சொல்லிக் கொள்ளலாம்.

கடவுளை எல்லாரும் ஒரே மாதிரி புரிந்து கொள்வது - அவர் உண்டா இல்லையா என்பது உள்பட - ஆகாத காரியம்.  இதை இப்படிப் பார்க்கலாம்.  ஈ.வெ.ரா-வை எடுத்துக் கொள்ளுங்கள். அவரை வழி காட்டியாக கொண்டாடுபவர்களே பல கட்சிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அண்ணாத்துரைக்கும்  அதே  பாடுதான். 'எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாதான் எங்களின்  முன்னோடித் தலைவர்கள்' என்று முழங்கியவாறு மோதிக் கொள்ளும் கட்சித் தலைவர்கள் பலர்  உண்டு.  சமீப காலத்தில் மனிதர்களிடையே வாழ்ந்து சென்ற தலைவர்களே அவர்களைப் பின்பற்றுவோருக்கு  பன்முகமாகத் தோன்றுகிறார்கள். கடவுளைப் பொறுத்தவரை பல நூற்றாண்டுகளாகவே அவர் மனிதர்களுக்குள் மனிதராக அனைவருக்கும் தெரியும்படி உலா வந்ததில்லை. அவர் இருக்கிறாரா இல்லையா என்பதில் மக்கள் வேறுபட்டு, அவரை நம்புகிறவர்களும் அவரைப் பல விதமாகப் புரிந்தபடிதான் இருப்பார்கள். ஆகையால் உங்களுக்கு எந்த நம்பிக்கை அல்லது நம்பிக்கை இன்மை வருகிறதோ, எந்தவிதமான வழிபாடு சரிப்படுகிறதோ அதை - மற்றவர்களைப் பழிக்காமல், மற்றவர்களுக்கு  இடைஞ்சல் செய்யாமல் - நீங்கள் கடைப்பிடிக்கலாம். பகுத்தறிவோ இல்லையோ, ஒருவரை மற்றவர் இம்சிக்காமல் இருப்பது நல்ல பண்பு.

இப்போதுள்ள யதார்த்த நிலை என்ன? ஓங்கி இருக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழ் நாட்டு மக்கள் நடுவில் இன்று எவரும் ஈ.வெ.ரா மாதிரி பிள்ளையார் சிலையை உடைக்க தைரியமாக முன்வர மாட்டார்கள். அப்படி ஒருவர் முனைந்தாலும், அந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு நம்பிக்கையாளர்கள் கையைக் கட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள். இதை அறிந்த இன்றைய பகுத்தறிவுத் தலைவர்கள் தங்கள்  பிரசாரத்தையும்  அகங்காரத்தையும் பேச்சில் மட்டும் வெளிப்படுத்துகிறார்கள்.

சென்ற மாதம் வைரமுத்து ராஜபாளையத்தில் பேசியபோதும், பின்னர் தினமணியில் எழுதியபோதும் இந்துக்கள் வழிபடும் ஆண்டாளைப் பற்றி ஆதாரமில்லாமல் அவதூறான கருத்தைத் தெரிவித்தாரே, அதுவும் மக்கள் மத்தியில் பிள்ளையார் சிலை உடைப்பதைப் போலத்தான் – ஆனால் வைரமுத்து  அப்படி சரியாக உணரவில்லை. எதிர்ப்புகள் தொடங்கிய போது, ஏதோ 'ஒரு ஆய்வாளரின் கருத்தைத்தான் சொன்னேன், அது என் கருத்தல்ல' என்று மழுப்பினார். பெரிய எதிர்ப்பு கிளம்பியதால், தன்மீது தவறில்லை என்று சொல்லிக்கொண்டே  ஒப்புக்கு ஏதோ  அஞ்சு-பைசா வருத்தம் தெரிவித்தார். 

வைரமுத்து ஆண்டாளைப் பற்றி  குறிப்பிட்ட ஆய்வே நடந்ததில்லை, முற்றிலும் தவறானது, எந்த ஆதாரமும் இல்லாதது என்று ஒருவர் வலுவாக எடுத்துக் காட்டியது சமூக வலைத்தளங்களில் பரவியது. அது வைரமுத்துவையும் கண்டிப்பாக எட்டி இருக்கும். இல்லாவிட்டாலும் வைரமுத்துவே பின்னராவது தெரிந்துகொண்டிருப்பார். அதன்  பிறகாவது,  ’மற்றோரு ஆய்வாளரின் கருத்து என்று நான் சொன்னது சத்தில்லாதது. அது கடவுள் என்று வணங்கப் படுபவரை  இழிவு படுத்துகிற மாதிரி அமைந்துவிட்டது. ஆகையால்  ஆண்டாளை பற்றி நான் மேற்கோள் காட்டி வெளியிட்ட கருத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். இந்துக்களிடம்  மனமார்ந்த வருத்தம்  தெரிவிக்கிறேன்’ என்ற வகையில் வைரமுத்து அறிவித்திருக்க வேண்டும்.  அப்படி செய்திருந்தால், பிரச்சனைக்கு சுமுக முடிவு கிடைத்து அவரிடம் நேர்மை இருக்கிறது என்றும் ஆகும். அது அவர் கடவுளை ஏற்றுக் கொண்டதாகவும் ஆகாது. ஆனால் அவரிடம் நேர்மை சந்தேகமே என்று காண்பித்து விட்டார்.

    இனி தமிழ் நாட்டில் வைரமுத்துவோ மற்றவர்களோ இது போல இந்துக்களை இழிவுபடுத்த தயங்கவேண்டும். அதாவது, வேறு மதத்தவர்களின் மத உணர்வுகளை எந்தக் காரணத்திற்காக கேவலப் படுத்தாமல் இருகிறார்களோ, அதே காரணத்திற்காக இந்துக்களையும் மதிக்க முற்படுவார்கள் என்று நம்பலாம்.   அந்த அளவிற்கு கடவுளை நம்பும் இந்துக்கள் அவருக்கான எதிர்ப்பு மூலம் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி விட்டார்கள். இதுதான் இந்துக்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வெற்றி. இந்த ஒற்றுமை உணர்வை அவர்கள்  தொடர்ந்து காக்க வேண்டும்.  இது சுலபமல்ல, ஆனால் அவசியம்.

பெருவாரியான இந்திய மக்களை மனதளவில் இணைக்கும் தங்கச் சங்கிலி இந்துமதம். பல மாநிலங்களில் பரந்து வாழ்ந்து பல மொழிகள் பேசினாலும், இந்தியாவில் மிகப் பெரும்பான்மை மக்களான இந்துக்கள் மத அடிப்படியில்தான் ஒற்றுமை உணர்வு கொள்கிறார்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.  இந்த உணர்வுதான் அவர்களிடம் தேச ஒற்றுமையையும் சேர்த்து வளர்க்கும் முக்கிய காரணம்.  அதனால்தான் பல வெளிநாட்டு வாழ் இந்திய இந்துக்களும் இந்தியாமீது பிடிப்பு வைத்திருக்கிறார்கள். இந்துக்களின் இந்த அடிப்படை ஆக்கபூர்வ மத உணர்வு இந்தியாவின் அனேக அறிவு ஜீவிகளுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் (’பல மீடியா மனிதர்களுக்கும்’ என்றும் படிக்கலாம்) விருப்பமானதல்ல. ஆனால் அவர்களே காஷ்மீரில் பல விஷமிகள் மத அடிப்படையில் ஒன்றுபட்டு இந்திய ராணுவத்தினர் மீது  கல்லெரிந்தாலும் சுட்டாலும், அந்த நபர்களை அனுசரணையோடு புரிந்து கொள்ள வேண்டும் என்று வினோத வாதம் செய்வார்கள்.  இதையெல்லாம் தாண்டி இந்திய இந்துக்கள் மேலும் ஆக்கபூர்வமாக ஒன்றுபட்டிருப்பது அவர்களுக்கும் நல்லது, தேசத்திற்கும் நல்லது.

          வைரமுத்துவின் ஆண்டாள் பழிப்புக்கு வந்த எதிர்ப்பில் சில வரம்பு மீறியவை ஆகும். ஆனால், ஒரு தரப்பினர் மற்றவர் மீது ஒரு வகையில் எல்லை மீறல் செய்யலாம், அதை அரசும் சட்டமும் தடுக்காது என்ற நிலை இருந்தால் மற்றொரு தரப்பினரும் அவர்களால் முடிந்த எல்லை மீறல் செய்வார்கள். இது உலகெங்கும் உள்ள  மனித இயல்பு.  இதில் பாராட்டி போற்றத்தக்க அம்சம் ஏதும் இல்லை, ஆனால் அரசும் சட்டமும் புரிந்துகொண்டு செயலாற்ற விஷயம் உண்டு. ஆகையால் ஒருதலைப் பட்ச பார்வையை அரசும் சட்டமும் மாற்றிக் கொண்டு உண்மையான ஜனநாயக சம நோக்கை வெளிப்படுத்துவது நல்லது.  இது படிப்படியாக இந்தியாவில் நிறைவேற வேண்டும்.

வைரமுத்து விஷயத்தில், அவர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற சிலரின் கோரிக்கையை விட்டுவிடலாம்.  இது வைரமுத்துக்காக அல்ல, ஆண்டாளுக்காக. ஆண்டாளை கடவுள் என்று நம்பாத ஒருவரை அந்தக் கடவுளின் சன்னதிக்கு வரவழைத்து விழச் சொல்வதும் ஒன்றுதான், ஒரு பழக்கப் படுத்திய கரடிக் குட்டியை அங்கு நமஸ்கரிக்க வைப்பதும் ஒன்றுதான்.

களிமண் உருவங்கள் செய்து பழகாத ஒருவர் களிமண்ணை எடுத்து பிள்ளையார் பிடிக்க எண்ணினால் அது குரங்காக அமையலாம் என்ற அர்த்தத்தில் ஒரு பழமொழி உண்டு (பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை). வைரமுத்து செய்து பார்த்தது பழமொழிக்கு நேர் எதிர். அவர் ’ஆண்டாள் அவதூறு’ என்ற குரங்கு சிலை பிடிக்க முனைந்தால், அது அப்படி  நிலைக்காமல் ’இந்துக்கள் ஒற்றுமை’ என்கிற பிள்ளையார் சிலை தமிழ்நாட்டுக்குக் கிடைத்து விட்டது! தப்பான களிமண் சிலை செய்ய நினைத்தவரை ஒதுக்கிவிட்டு, கிடைத்த பிள்ளையார் சிலையைப் பாதுகாத்துக் கொண்டாடுவதுதானே சரி?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

7 comments:

  1. Very rightly said.when it is proved that there is no basis for whatever wrong has been written about andal, an honest writer should apologize for writing something based on non-fact. But, I don't know whether vairamuthu will do that.

    ReplyDelete
  2. Really the presentation is a different way of approach.positive way in two things
    1.Bringing together all Hindus United
    2.another way that Vairamuthu is an expert monkey maker in clay than his idea of bringing out Pillayar

    ReplyDelete
  3. Excellent article. The strongest protest must be registered so that such people will not brazenly indulge in such things so audaciously. On a side note, I believe our PM Narendra Modi is also uniting us, Hindus, standing on the good side.

    ReplyDelete
  4. Aandal's work cannot be understood by ordinary mortals. Novices would term it as "erotic literature". Sri Jayadeva's GitaGovindam has had same treatment. In olden times, Saundaryalahiri would be taught only to Shaktas[Devi upasakas] as it could be msiunderstood and misinterpreted by charlatans. It was kept in secret but with the advent of printing all these secrets are available for 15 Rs !!.

    Sri Aandal's path was Nayaka-Nayaki Bhava which is exceedingly difficult and rare[Saint Manikyavachakar or Manikkavasagar is another example belonging to this form of Bhakthi[so is Meera Bai in Rajasthan]. This Bhava has ALL other Bhakthi bhavas like, santhana[Jnanasambandhar, Sri ramakrishna , Sri Ramana], Sakha[Saint Sundaramoorthi Nayanar, Arjuna, Kuchela , Namdev etc] and dasa Bhava[Sri Hanuman, Sri Thirunavukkarasar] and Vatsalya[Yasodha's love for Sri Krishna].

    I am not well versed in Bhakthi or Tamil literature; Even a sedate individual like me could not help getting moved after reading Sri Aandal's Varanam Aayiram poems.

    Aandal is a great Alwar and a mother and Guru to all of us. A Phony's opinion cannot change it. It is unfortunate, for the sake of increasing Dinamani's sales, the Editor has stooped so low. Nothing sells like Controversy !! Today we have views and not news in any channel in TV nor in News[views] papers !!

    Another culture creeping in this country is : Anbody can write/talk/speak about anything without knowing anything. All you have to have is a mouth or a pen !! Mera Bharath Mahan !!

    ReplyDelete
  5. You have ascribed only one act to EVR, Karunanidhi & Veeramani in the opening lines of your blog- all three have hurt, mocked & condemned Hindus. Death has put a stop to EVR ; Age & sickness have taken away the voice box of karunanidhi. Veeramani is doing all the three acts even today. There are many followers to Veeramani and Vairamuthu is the latest to come to limelight in his new role.

    ReplyDelete
  6. The move by great learned lawyers and esteemed politician clearly shows that there is clear brankuptcy of ethical,moral,judicial inside those GREAT people who claim to be the saviours of our nation and its constitution.

    ReplyDelete