Thursday 5 October 2017

அரசு செய்ய விரும்பு! ஆளுவது பணம்!


ஔவையார் வழங்கிய  நெறி சார்ந்த ஆத்தி சூடி பிரசித்தம்.  தற்காலத்தில் முன்னணி அரசியல்வாதிகள் உருவாக்கி செயல்படுத்தும் பல அரசியல் சூத்திரங்களும் பொருள் பொதிந்தவை. ஆனால் அவற்றுக்கு முறையான சொல்-வடிவம் இல்லாததால் அவை அதிகம் பிரசித்தி அடையவில்லை.

ஔவையாருக்கு ஒரு நீதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி கூடாது. ஆகையால் அரசியலார் வகுத்த புதிய ஆத்தி சூடியும் சுருக்கமாக பன்னிரண்டு வரிகளில் தொகுத்து இங்கே அளிக்கப் படுகிறது. அருகிலேயே அசல் ஆத்தி சூடியிலிருந்து எடுத்த பன்னிரண்டு வரிகளும் தரப்படுகின்றன – அதாவது பாவத்தை துடைக்கும் புண்ணியமும் உடனுக்குடன் உங்களுக்குக் கிடைப்பதால் நீங்கள் தயங்காமல் இதைப் படிக்கலாம்.




ஔவையாரின் 
ஆத்தி சூடி


அரசியலாரின் 
ஆத்தி சூடி


அறம் செய விரும்பு
(தருமம் செய்ய நீ விரும்புவாயாக)


அரசு செய்ய விரும்பு!


ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்)

ஆளுவது பணம்!

இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு தயங்காமல் கொடு)

இயல்வதைக் கறந்துவிடு! 

ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை வேண்டாமென்று தடுக்காதே)

ஈனம் மானம் விலக்கி வை!

உடையது விளம்பேல் 
(உன்னிடத்தில் உள்ள பொருட்கள் அல்லது ரகசியங்கள் எல்லாவற்றையும் பிறர் அறியுமாறு சொல்லாதே)

உண்மை நேர்மை பரண் மேல்!

ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது)

ஊழலைக் கைவிடேல்!
எண் எழுத்து இகழேல்
(எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன.  அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே)

எண்ணம் போல் லஞ்சம் பெறு! 
ஏற்பது இகழ்ச்சி
(யாசகம் வாங்கி வாழ்வது இழிவானது.  ஆகையால் யாசிக்கக் கூடாது)

ஏற்பது மகிழ்ச்சி!
ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்களுக்கு கொடுத்து, பிறகு உண்ண வேண்டும்)


ஐநா சபைக்கும் ஆசைப் படு!

ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அதோடு பொருந்துமாறு நடந்து கொள்)


ஒப்புக்கு சி.எம்-னாலும் அழகு!

ஓதுவது ஒழியேல்
(நல்ல நூல்கள் படிப்பதை நிறுத்தாதே)

ஓப்பி அடிப்பது ஒழியேல்!



ஔவியம் பேசேல்
(ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே)


ஔவைப் பாட்டி அம்பேல்!


* * * * *

Copyright © R. Veera Raghavan 2017