Saturday 23 September 2017

கமல் ஹாசன்: ”ஊழலே போ போ! பதவியே வா வா!”


"நான் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகத் தயார்" என்று பிரகடனம் செய்திருக்கிறார் நடிகர் கமல் ஹாசன். இந்த மாநிலத்தில் அரசியலுக்கு வர நினைக்கும் பிரபலஸ்தர் எவருக்கும் தோன்றும் முதல் ஆசை இதுதான்.

இருக்கும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் தற்போது முதல்வராக உள்ளவரோடு அல்லது அடுத்த முதல்வர் ஆகத் துடிப்பவரோடு மல்லுக் கட்டவேண்டும். அவரும் இவரை டி.வி கேமராக்கள் முன் தழுவி வரவேற்றுவிட்டுக்  காலம் பூராவும் எச்சரிக்கையாகத் தள்ளி வைத்திருப்பார். ஆனால் புதுக் கட்சி ஆரம்பித்தாலோ வெளி மாநிலத் தலைமை கொண்டு தமிழகத்தில் சோப்ளாங்கியாகப் படுத்திருக்கும் கட்சியில் சேரந்தாலோ அந்தப் பிரச்சனை இல்லை. உடனே கனவு மெய்ப்பட களம் இறங்கலாம். சரி, இது கமல் ஹாசன் பாடு. அவர் பார்த்துக் கொள்ளட்டும்.

ஜனநாயகத்தில் எவரும் எந்த வயதிலும் அரசியலில் நுழையலாம். மாநில முதல்வர் அல்லது தேசத்தின் பிரதமர் ஆகும் நோக்கத்துடன் அரசியலுக்கு வரலாம். தவறில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு அந்த எண்ணம் சாத்தியம் ஆகலாம். அதனால் நன்மையும் விளையலாம். எப்படியென்றால், ஆட்சியில் அமர்ந்த பின் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற நினைப்பில் அதிகார துஷ்பிரயோகமும் ஊழலும் செய்யும் கிராதகர்களை சடாரென்று கீழ் இறக்க மக்களுக்கு ஜனநாயகம் தந்திருக்கும் ஒரு குறுக்கு வழி இது. ஆனால் சரியான குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காவிட்டால் போகவேண்டிய இடத்தை விட்டு  நாம் வெகு தூரம் விலகிவிடுவோம். மக்களின் முதிர்ச்சி மட்டுமல்ல, அவர்களின் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது இந்தக் குறுக்கு வழித்தேர்வின் முடிவு. நேர்வழித் தேர்வில் மட்டும் நமது ஜனநாயகத்தில் எது நிச்சயம் என்று கேட்கிறீர்களா? ம்…ம்…ம்… அதற்கும் மக்களுக்கு அதிர்ஷ்டம் தேவைதான். 

ஊழலை எதிர்க்கும் பிரதான நோக்கத்துடன் அரசியலுக்கு வருவதாக கமல் ஹாசன் சொல்கிறார். ”ஓன்று நான் போகவேண்டும். அல்லது அரசியலில் இருந்து ஊழல் அகற்றப்பட வேண்டும். இரண்டையும் ஒன்றாக வைத்திருக்க முடியாது” என்றும் தெரிவித்திருக்கிறார். கேட்கும்போது சிலருக்குப் புல்லரிக்கலாம்.  சிலர் புன்னகைக்கலாம்.

லஞ்ச ஊழல் என்பது சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, நேர்மைக்கு எதிர்ப்பதமும் ஆகும்.  1970-களில் ஊழலை எதிர்த்து மாபெரும் இயக்கம் நடத்திய ஜெயபிரகாஷ் நாராயண் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி, பொதுநல ஊழியர், தூய்மையும் நேர்மையும் நிறைந்தவர் என்பது அனைவரும் அறிந்தது. அந்த குணங்கள் அவரது ஊழல் எதுர்ப்புக் குரலுக்கு வலிமையும் நம்பகத் தன்மையும் அளித்தன. அவர் காலத்தில் இந்தியாவில் ஓங்கி இருந்த ஊழலை விடவும் தற்காலத் தமிழகத்தில் ஊழல் இன்னும் அதிகமாக வியாபித்திருக்கிறது. ஆனால் ’ஊழலை எதிர்க்கிறேன்’ என்று இப்போது புறப்படும் கமல் ஹாசனிடம் அதை செயல் படுத்துவதற்கான விசேஷத் தகுதி இருக்கிறதா?

முன்னணி அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் உதாரணத்தோடும் மறைமுக  ஆதரவோடும் லஞ்ச ஊழல் ஆள்பவர்களில் ஆரம்பித்து அதிகாரிகள் வரை பரவி மக்களைத் துன்புறுத்துகிறது. லஞ்ச ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஆளும் கட்சி அந்தப் பாதகத்தைச் செய்கிறது என்றால், மக்களிடம் அதைச் சொல்லியே ஆளும் கட்சியை இறக்கிவிட்டு அதே காரியத்தை செய்யத் தயாராக இருக்கின்றன சில முக்கிய எதிர்க் கட்சிகள்.  விதி விலக்குகள் சொற்பம்.

‘’ஊழலை எதிர்க்க நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று ஒருவர் பிரகடனம் செய்தால், அவர் என்ன செய்யவேண்டும்? ஊழல் கறை பெரிதாகத் தெரியும் எல்லாக் கட்சிகளின் பெயர் சொல்லி, ”அவை அனைத்தும் ஒன்றுதான். மக்களே, தூய்மையான ஆட்சி வேண்டும் என்றால் அவைகள் யாருக்கும் வாக்களிக்காதீர்கள்” என்று அவர் சொல்லவேண்டும். அப்போதுதான் அவர் முழுதும் நேர்மையானவர் என்று அர்த்தம். ஏனென்றால் முழு நேர்மையும் உண்மையான ஊழல் எதிர்ப்பின் ஒரு பகுதி. தமிழ் நாட்டில் அப்படி நேர்மையான தலைவராக இருந்த காமராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு கட்சிகளைக் குறிப்பிட்டு அவைகள் “ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சொன்னார்.  ஜெயபிரகாஷ் நாராயணும் இந்திரா காந்தியை அடையாளம் காட்டி அவரது ’முழுப் புரட்சி’ போராட்டத்தை தீவிரப் படுத்தினார்.

சுதந்திரத்திற்குப் பின் நடந்த தேர்தல்களினால் 1952-லிருந்து 1967 வரை, 15 வருடங்கள் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. பிறகு இன்றுவரை 40 ஆண்டுகளாக திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி அரசாங்கம் அமைத்திருக்கின்றன.  கமல் ஹாசன் என்ன சொல்ல வருகிறார்?  ’முதல் 15 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் இங்கு ஊழல் பெருமளவு ஆரம்பித்து, அதன் பின்னர் இரண்டு திராவிடக் கட்சிகள் முயன்றும் அது இன்றுவரை கட்டுப் படாமல் அதிகாரிகள் மட்டத்தில் வளர்ந்துவிட்டது’ என்கிறாரா? அல்லது ’இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்று பரிசுத்தமாக இருந்தாலும் மற்றொன்றுதான் ஊழலை வளர்த்து விட்டது’ என்கிறாரா? அல்லது ‘இரண்டு திராவிடக் கட்சிகளுமே லஞ்ச ஊழலைக் கண்காணிக்கவில்லை, கட்டுப் படுத்தவில்லை. அதனால் தமிழகத்தில் ஊழல் நிரம்பிவிட்டது’ என்கிறாரா? கமல் ஹாசன் பேச்சில் தெளிவு இல்லை, நேர்மை இல்லை. வழவழப்பும் சாதுரியமும் தான் தெரிகிறது.  அரசியலில் காலூன்றவும் தழைக்கவும் அவரது அணுகு முறை பயன்படலாம்.  ஊழலை வீழ்த்த இது உதவாது.

‘ஊழல் எதிர்ப்பு’ என்ற புனிதக் கிரீடம் அணிந்து தமிழ் நாட்டு அரசாங்கத்தின் தலைமை ஏற்க ஆசைப்பட்டால், மாநிலத்தில் ஊழலை விதைத்தவர்களையும் பெரிதாக வளர்த்தவர்களையும் நேர்மையாக அடையாளம் காட்டி எதிர்த்தால்தான் புனிதக் கிரீடம் தலையில் பொருந்தும்.  அந்தக் கிரீடம் தேவை இல்லை என்றால் அதனால் பாதகமில்லை. “நான் அரசியலுக்கு வருகிறேன்” என்கிற ஒரு வரியோடு உள்ளே நுழையலாம். தமிழக அரசியல் களத்தில் குதிபோடும் பல கட்சித் தலைவர்களையும் பார்த்தால், யார்தான் அரசியலுக்கு வரக் கூடாது? யார்தான் முதல்வராக ஆசைப்பட மாட்டார்கள்?

”தமிழக ஆட்சிக்குப் புத்துயிர் தேவை. தமிழகம் அப்போதுதான் முன்னேறும்.  நான் முதல் அமைச்சராக வந்தால் அது நிகழும்” என்று பொதுப்படையாக மட்டும் கமல் ஹாசன் பேசி இருந்தால்  அது அவரது ஊழல் எதிர்ப்புப் பேச்சு மாதிரி விமரிசனம் பெறாது. ஆனால் யாருக்குத் தெரியும்? ’அப்படிப் பேசினால் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளையும் ஒதுக்குவதாக ஆகிவிடும். ஒன்றை மட்டும் நான் எதிர்ப்பதாகத் தோன்றவேண்டும் என்றால் ’ஆளும் கட்சிக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு’ என்பதுதான் சரியான யுக்தி’ என்று கமல் ஹாசன் நினைத்து விட்டாரா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017



10 comments:

  1. தமிழ் நாட்டில் அப்படி நேர்மையான தலைவராக இருந்த காமராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு கட்சிகளைக் குறிப்பிட்டு அவைகள் “ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சொன்னார்.
    ஒரு மட்டையின் தலைவர் ஊழல் மகாராஜா என்றால் அடுத்த மட்டையின் தலைவி ஊழல் மகா ராணி! உலகம் அறிந்த உண்மையை கமலஹாசன் வெளிப்படையாக ஆணிஅடித்தாற் போலச்சொல்லி தான் நேர்மையான முதல்வராகவும், அவர் ஆட்சி காமராசர் ஆட்சியாக மலரும் என்று கூறியிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. Is Kamal clean? Fellow with no scruples and character. When a man cannot maintain a wife happily, can he try keeping 6 crores tamils satisfied. Age has withered his spirit and his market having sagged, he is upto a new game. Let us disqualify him straightaway. Ambujam Mami is the ideal choice

    ReplyDelete
  3. Dr.subramaniam swamy's comments about Kamal's entry into Tamil Nadu politics are crisp and clear.

    ReplyDelete
  4. Ha !! A man with no scruples talks about Thamizh Kalacharam during the Jallikkattu days..has no iota of Tamizh Kalacharam ( ofcourse we have no business to talk about his private life...but he is man with no scruples...marrying...living together....ugh!..And he hobnobbed with the Yellow thundu goggles man and his corrupt family ..Where was the concern for corruption then ? He will make the most unsuitable Chief Minister !
    Ha ! His talks are empty..yet another cunning politiciana in the making !! Nothing else ! Hope he loses deposit when he stands for election ! The hypocrite !

    ReplyDelete
  5. Dreaming to swindle ? while every political party that ruled TN swindled and swindling, why not one create a new political party to swindle ?

    ReplyDelete
  6. Normally it is the opinion in great persons that business people would be dishonest one way or the other;Cinema industry also embraces immoral habits. That is why even Kamaraj ridiculed cine persons and did not give high importance to them. Kamal is no exception. I strongly feel he is dishonest and cunning!

    ReplyDelete
  7. Kamal in politics is a strategy funded by DMK to split AIADMK vote bank. DMK is desperate for power. They tried several tricks so far. Splitting AIADMK with backdoor pitch with Sasikala even when Jaya was alive and post her demise with TTV Dinakaran. Since that pot is still boiling, next strategy is to split AIADMK voters, with intro of Kamal in politics.... Also there is a fear in DMK of Rajni taking over TN BJP.

    ReplyDelete
  8. Did the former and current CMs such as OPS, EPS, J.J, Kalaignar have a career record of absolute scruples and clean personal life and finance? We all know none of the Dravidian parties hold high scruples. None provided clean governance, transparency etc. What worse could happen when KH becomes CM? Did JJ have a clean personal life? Did Kalaignar have just 1 family? Now, it is true that KH has to prove his mettle and I do not have high hopes of him making a big change. But we cannot dismiss him due to wrong reasons ... he should get a chance to explain his agenda and then we can ask more questions.

    ReplyDelete
  9. சிந்தனையைத் தூண்டும் கருத்துகள்.
    கமல் அரசியலுக்குவருகிறாரா அல்லது அவரது உள்நோக்கம் என்ன? என்ற வினாக்களை எழுப்பும் முன்னால் இந்த டுபாக்கூர் ஆட்சி நிலைக்க வேண்டுமா, திராவிடக் கட்சிகளின் ஊழல் சிந்தனைகளிலேயே நாம் உழன்று கொண்டிருக்க வேண்டுமா? என்று எண்ணீப் பார்க்க வேண்டும். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே- சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது
    கமலஹாசன் அரசியல் தெரியாத அரை வேக்காடு என்றே வைத்துக் கொள்வோம். இன்று கமலஹாசன் வரக்கூடாது அவருக்கு அரசியல் அறிவில்லை என்று மீசை துடிக்கப் படபடக்கும் அரசியல்வாதிகள் எத்தனை பேர் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்? மக்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல் என்ற வியாபாரத்தை கமலஹாசன் அறியாதிருக்கலாம். நாமெல்லாம் மனசுக்குள் வெம்பி வேதனைப் படுவதை வெளிப்படையாகத் துணிச்சலுடன் சொல்கிறார். அவர்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில்லை. ஊழலுக்கு எதிராக டீக்கடை பென்சுகளில் பேசி டீயையும் மனசையும் ஆற்றிக் கொள்பவர்களில் யாராவது துணிந்து தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்துகிறேன் என்று முன் வரட்டுமே!
    அரசியல் என்பது வியாபாரம்
    அதில் ஐம்பது கோடி செல்வாகும்
    ஆயிரம் கோடி வரவாகும்
    வருவது லாபம் வாடா எனும் அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தன் சிந்தனையை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஒத்த மனம் கொண்டவர்கள் கைகோர்க்க வேண்டும்.
    கமலஹாசன் அரசியலுக்குப் புதியவர்தான்- அரசியலின் நெளிவு செளிவுகளை அறியாதவர்தான்.அதனால்தான் பல அரசியல் கட்சிகளின், தலைவர்களின் கருத்துக்களை கேட்கிறார்.
    முடிவாக அவரது திட்டங்கள் என்ன/ யார் யாரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளப் போகிறார் என்பது அவருக்கே இன்னும் தெரியாத ஒன்று.
    இப்போதுதான் விதை விதைக்கப் பட்டிருக்கிறது. வெளிவரும்போதுதான் அது கருவேல மரமா? அல்லது கனிதரும் விருட்சமா? என்று தெரியும். அதற்குள் அவசரப் படுவானேன்?
    டி.எஸ்.பத்மநாபன்
    காசு வாங்காமல் நேர்மையாக வாக்காளர்கள் ஓட்டுப் போட்டாலே ஒரு நல்லாட்சி அமையும்.
    நல்லதையே நினைப்போம்- நல்லதையேவிதைப்போம் - நல்லதே நடக்கும்
    எந்த அவசர முடிவுக்கும் வரவேண்டாம்

    ReplyDelete