Saturday, 23 September 2017

கமல் ஹாசன்: ”ஊழலே போ போ! முதல்வர் பதவியே வா வா!”


"நான் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகத் தயார்" என்று பிரகடனம் செய்திருக்கிறார் நடிகர் கமல் ஹாசன். இந்த மாநிலத்தில் அரசியலுக்கு வர நினைக்கும் பிரபலஸ்தர் எவருக்கும் தோன்றும் முதல் ஆசை இதுதான்.

இருக்கும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் தற்போது முதல்வராக உள்ளவரோடு அல்லது அடுத்த முதல்வர் ஆகத் துடிப்பவரோடு மல்லுக் கட்டவேண்டும். அவரும் இவரை டி.வி கேமராக்கள் முன் தழுவி வரவேற்றுவிட்டுக்  காலம் பூராவும் எச்சரிக்கையாகத் தள்ளி வைத்திருப்பார். ஆனால் புதுக் கட்சி ஆரம்பித்தாலோ வெளி மாநிலத் தலைமை கொண்டு தமிழகத்தில் சோப்ளாங்கியாகப் படுத்திருக்கும் கட்சியில் சேரந்தாலோ அந்தப் பிரச்சனை இல்லை. உடனே கனவு மெய்ப்பட களம் இறங்கலாம். சரி, இது கமல் ஹாசன் பாடு. அவர் பார்த்துக் கொள்ளட்டும்.

ஜனநாயகத்தில் எவரும் எந்த வயதிலும், எந்த சூழ்நிலையிலும், அரசியலில் நுழையலாம். மாநில முதல்வர் அல்லது தேசத்தின் பிரதமர் ஆகும் நோக்கத்துடன் அரசியலுக்கு வரலாம். தவறில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு அந்த எண்ணம் சாத்தியம் ஆகலாம். அதனால் நன்மையும் விளையலாம். எப்படியென்றால், ஆட்சியில் அமர்ந்த பின் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற நினைப்பில் அதிகார துஷ்பிரயோகமும் ஊழலும் செய்யும் கிராதகர்களை சடாரென்று கீழ் இறக்க மக்களுக்கு ஜனநாயகம் தந்திருக்கும் ஒரு குறுக்கு வழி இது. ஆனால் சரியான குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காவிட்டால் போகவேண்டிய இடத்தை விட்டு  நாம் வெகு தூரம் விலகிவிடுவோம். மக்களின் முதிர்ச்சி மட்டுமல்ல, அவர்களின் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது இந்தக் குறுக்கு வழித்தேர்வின் முடிவு. நேர்வழித் தேர்வில் மட்டும் நமது ஜனநாயகத்தில் எது நிச்சயம் என்று கேட்கிறீர்களா? ம்…ம்…ம்… அதற்கும் மக்களுக்கு அதிர்ஷ்டம் தேவைதான். 

ஊழலை எதிர்க்கும் பிரதான நோக்கத்துடன் அரசியலுக்கு வருவதாக கமல் ஹாசன் சொல்கிறார். ”ஓன்று நான் போகவேண்டும். அல்லது அரசியலில் இருந்து ஊழல் அகற்றப்பட வேண்டும். இரண்டையும் ஒன்றாக வைத்திருக்க முடியாது” என்றும் தெரிவித்திருக்கிறார்.  கேட்கும்போது சிலருக்குப் புல்லரிக்கலாம்.  சிலர் புன்னகைக்கலாம்.

லஞ்ச ஊழல் என்பது சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, நேர்மைக்கு எதிர்ப்பதமும் ஆகும்.  1970-களில் ஊழலை எதிர்த்து மாபெரும் இயக்கம் நடத்திய ஜெயபிரகாஷ் நாராயண் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி, பொதுநல ஊழியர், தூய்மையும் நேர்மையும் நிறைந்தவர் என்பது அனைவரும் அறிந்தது. அந்த குணங்கள் அவரது ஊழல் எதுர்ப்புக் குரலுக்கு வலிமையும் நம்பகத் தன்மையும் அளித்தன. அவர் காலத்தில் இந்தியாவில் ஓங்கி இருந்த ஊழலை விடவும் தற்காலத் தமிழகத்தில் ஊழல் இன்னும் அதிகமாக வியாபித்திருக்கிறது. ஆனால் ’ஊழலை எதிர்க்கிறேன்’ என்று இப்போது புறப்படும் கமல் ஹாசனிடம் அதை செயல் படுத்துவதற்கான விசேஷத் தகுதி இருக்கிறதா?

முன்னணி அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் உதாரணத்தோடும் மறைமுக  ஆதரவோடும் லஞ்ச ஊழல் ஆள்பவர்களில் ஆரம்பித்து அதிகாரிகள் வரை பரவி மக்களைத் துன்புறுத்துகிறது. லஞ்ச ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஆளும் கட்சி அந்தப் பாதகத்தைச் செய்கிறது என்றால், மக்களிடம் அதைச் சொல்லியே ஆளும் கட்சியை இறக்கிவிட்டு அதே காரியத்தை செய்யத் தயாராக இருக்கின்றன சில முக்கிய எதிர்க் கட்சிகள்.  விதி விலக்குகள் சொற்பம்.

‘’ஊழலை எதிர்க்க நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று ஒருவர் பிரகடனம் செய்தால், அவர் என்ன செய்யவேண்டும்? ஊழல் கறை பெரிதாகத் தெரியும் எல்லாக் கட்சிகளின் பெயர் சொல்லி, ”அவை அனைத்தும் ஒன்றுதான். மக்களே, தூய்மையான ஆட்சி வேண்டும் என்றால் அவைகள் யாருக்கும் வாக்களிக்காதீர்கள்” என்று அவர் சொல்லவேண்டும். அப்போதுதான் அவர் முழுதும் நேர்மையானவர் என்று அர்த்தம். ஏனென்றால் முழு நேர்மையும் உண்மையான ஊழல் எதிர்ப்பின் ஒரு பகுதி. தமிழ் நாட்டில் அப்படி நேர்மையான தலைவராக இருந்த காமராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு கட்சிகளைக் குறிப்பிட்டு அவைகள் “ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சொன்னார்.  ஜெயபிரகாஷ் நாராயணும் இந்திரா காந்தியை அடையாளம் காட்டி அவரது ’முழுப் புரட்சி’ போராட்டத்தை தீவிரப் படுத்தினார்.

சுதந்திரத்திற்குப் பின் நடந்த தேர்தல்களினால் 1952-லிருந்து 1967 வரை, 15 வருடங்கள் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. பிறகு இன்றுவரை 40 ஆண்டுகளாக திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி அரசாங்கம் அமைத்திருக்கின்றன.  கமல் ஹாசன் என்ன சொல்ல வருகிறார்?  ’முதல் 15 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் இங்கு ஊழல் பெருமளவு ஆரம்பித்து, அதன் பின்னர் இரண்டு திராவிடக் கட்சிகள் முயன்றும் அது இன்றுவரை கட்டுப் படாமல் அதிகாரிகள் மட்டத்தில் வளர்ந்துவிட்டது’ என்கிறாரா? அல்லது ’இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்று பரிசுத்தமாக இருந்தாலும் மற்றொன்றுதான் ஊழலை வளர்த்து விட்டது’ என்கிறாரா? அல்லது ‘இரண்டு திராவிடக் கட்சிகளுமே லஞ்ச ஊழலைக் கண்காணிக்கவில்லை, கட்டுப் படுத்தவில்லை. அதனால் தமிழகத்தில் ஊழல் நிரம்பிவிட்டது’ என்கிறாரா? கமல் ஹாசன் பேச்சில் தெளிவு இல்லை, நேர்மை இல்லை. வழவழப்பும் சாதுரியமும் தான் தெரிகிறது.  அரசியலில் காலூன்றவும் தழைக்கவும் அவரது அணுகு முறை பயன்படலாம்.  ஊழலை வீழ்த்த இது உதவாது.

‘ஊழல் எதிர்ப்பு’ என்ற புனிதக் கிரீடம் அணிந்து தமிழ் நாட்டு அரசாங்கத்தின் தலைமை ஏற்க ஆசைப்பட்டால், மாநிலத்தில் ஊழலை விதைத்தவர்களையும் பெரிதாக வளர்த்தவர்களையும் நேர்மையாக அடையாளம் காட்டி எதிர்த்தால்தான் புனிதக் கிரீடம் தலையில் பொருந்தும்.  அந்தக் கிரீடம் தேவை இல்லை என்றால் அதனால் பாதகமில்லை. “நான் அரசியலுக்கு வருகிறேன்” என்கிற ஒரு வரியோடு உள்ளே நுழையலாம்.   தமிழக அரசியல் களத்தில் குதிபோடும் பல கட்சித் தலைவர்களையும் பார்த்தால், யார்தான் அரசியலுக்கு வரக் கூடாது? யார்தான் முதல்வராக ஆசைப்பட மாட்டார்கள்?

”தமிழக ஆட்சிக்குப் புத்துயிர் தேவை. தமிழகம் அப்போதுதான் முன்னேறும்.  நான் முதல் அமைச்சராக வந்தால் அது நிகழும்” என்று பொதுப்படையாக மட்டும் கமல் ஹாசன் பேசி இருந்தால்  அது அவரது ஊழல் எதிர்ப்புப் பேச்சு மாதிரி விமரிசனம் பெறாது. ஆனால் யாருக்குத் தெரியும்? ’அப்படிப் பேசினால் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளையும் ஒதுக்குவதாக ஆகிவிடும். ஒன்றை மட்டும் நான் எதிர்ப்பதாகத் தோன்றவேண்டும் என்றால் ’ஆளும் கட்சிக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு’ என்பதுதான் சரியான யுக்தி’ என்று கமல் ஹாசன் நினைத்து விட்டாரா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017Monday, 11 September 2017

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: அனிதாவுக்கு அப்புறம். பேச்சும் காரியமும் நீட்டா இருக்கணும்


கஷ்டமாத்தான் இருக்கு. டாக்டர் ஆக ஆசைப்பட்ட பொண்ணு, மெடிகல் சீட் கிடைக்கலைன்னு தூக்கு போட்டுண்டா யார் மனசுதான் சஞ்சலப் படாது? பாவம் அனிதா. 17 வயசுல மேலோகம் போய்ச் சேந்திருக்க வேண்டாம்.  

பாக்கறேளே,  'நீட்' (NEET) விவகாரம் தமிழ்நாட்டுல அமக்களப் படறது. மெடிகல் காலேஜ் சேர தகுதி அடையறதுக்கு இந்தியா முழுக்க 'நீட்'டுனு ஒரு பரீட்சை வைக்கறாளே, அதுல அனிதா குறைச்சலா மார்க் வாங்கிட்டா. அதுனால இந்த வருஷம் அவளுக்கு மெடிகல் காலேஜ்ல அட்மிஷன் கிடைக்காதுன்னு ஆயிடுத்து. அதைத் தாங்க முடியாம அசட்டுப் பொண்ணு உயிரை விட்டுடுத்து. தமிழ் நாட்டுக்கு 'நீட்' பரீட்சையே வேண்டாம்னு மறியல், ஆர்பாட்டம், போராட்டம் பண்ற அரசியல்வாதிகளுக்கு அனிதா இப்ப தெய்வமாயிட்டா. ஏன்னு கேக்கறேளா? தெய்வம்தான நம்மளை வாழவச்சு வளப்படுத்தணும்?

"அனிதா சுயமா விரும்பி தற்கொலை பண்ணிக்கலை. அந்தப் பொண்ணோட இறப்பை சட்டப்படி தீர விசாரிக்கணும்"னு      சொல்றவாளும் இருக்கா. அதெல்லாம் சட்டம் பாத்துக்கட்டும். அனிதா மறைவைக் காரணம் சொல்லி நீட் எதிர்ப்புக் குரல் கொடுக்கறவா முக்கியமா பேசறத மட்டும் பாக்கலாம்.

"தமிழ் நாட்டுக்கு நீட் வேண்டாம்.  அனிதாவோட தற்கொலைக்கு நீதி கேக்கறோம்"னு அரசியல் தலைவர்கள்  அதகளம் பண்றா. சினிமாத் துறைல இருக்கறவாளும் அதே ரீதில அபிப்பிராயம் சொல்றா. நீட் பரீட்சையை எதிர்க்கற ஒரு சினிமா பிரபலஸ்தர் "அனிதா என் மகள்"னு உருகிப் பேசிருக்கார்.  ’அனிதா என் கொள்ளுப் பேத்தி மாதிரி’ன்னு நானும் வாஞ்சையா சொல்லிப்பேன்.

அனிதா தற்கொலை பண்ணிக்காம சமத்தா உயிரோட இருக்கான்னு வச்சுக்கலாம். அப்ப எத்தனை பேருக்கு அவளைப் பத்தி தெரிஞ்சிருக்கும்? அவ போட்டோவை எத்தனை பேர் பாத்திருப்போம்?  மறைஞ்ச பிறகு அவளுக்குக் கிடைச்ச பிரபல்யமும் புகழ்ச்சியும் அவ உயிரோட வாழ்ந்து மறுமுயற்சில முன்னுக்கு வந்திருந்தாலும் துளியும் கிடைக்காது. ஏன்னு தெரிஞ்சதா?  மேலோக அனிதா மாதிரி பூலோக அனிதா அரசியல்வாதிகளுக்கும் பிரபலஸ்தர்களுக்கும் பிரயோஜனம் இல்லை. அதான் காரணம். "என்னது?  மனுஷ உயிர்னா சும்மாவா? ஒரு சூழ்நிலைல பாதிக்கப்பட்டு ஒரு சின்னப் பொண்ணு உயிரையே குடுத்திருக்கு. இதைப் பத்தி பெரிசாப் பேசாம இருக்க முடியுமா? அப்படிப் பேசறதுதான மனிதாபிமானம்?"னு பலர் எதிர்வாதம் பண்ணுவா. அதுக்கு நாம பதில் சொல்லணும். சொல்லிப் பாக்கறேன்.

ஒரு அப்பாவியோட உயிர் முக்கியம்னுதான் இந்த ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடக்கறதுன்னா, சம்பத்தப் பட்டவா இதுக்கு பதில் சொல்லணும். ஜல்லிக்கட்டு வேணும்னு பலபேர் போராடி நடத்தினாளே, அந்தப் போட்டிகள்ள எத்தனை அப்பாவி இளைஞர்கள் மாடு முட்டியே எமலோகம் போனா? எத்தனை பேர் மாட்டுக் கொம்பாலயே வாழ்நாள் பூரா மறக்க முடியாத காயமும் ஊனமும் வாங்கிண்டா? அவா பேர்லாம் இந்த மனிதாபிமானிகளுக்குத் தெரியுமா? ஜல்லிக்கட்டுல உயிர் போனவாளுக்கு யாராவது இரங்கல் கூட்டமாவது  நடத்தினாளா?  இருக்காது. ஏன்னா, அந்த அப்பாவிகள் இறப்புல அரசியல் ஆதாயம் கிடைக்காது. அதை வச்சு மாநில அரசையோ மத்திய அரசையோ எதிர்க்க வழி இல்லை.  வேற சுயலாபமும் கிடைக்காது. அனிதா விஷயம் வேற. ஆவியான அனிதாவை வச்சு ரண்டு அரசாங்கத்தை எதிர்க்கலாம். போராடற அரசியல்வாதிகளுக்கு குறுக்கு வழில பலன் கிடைக்கலாம். பிரபலஸ்தர்களும் அப்பாவி மக்கள் ஆதரவை கூட்டிக்கலாம்.  இதான உண்மை?

”தமிழ் நாட்டு மாநில பாட திட்டத்துல படிச்சுட்டு நீட் எழுதினா அதிக மார்க் வாங்க முடியலை. ஏழை மாணவர்கள் பணம் குடுத்து நீட் பரீட்சைக்காக தனி டியூஷன் எடுத்துக்க முடியாது. அனிதா மரணம் இதையும் வெளிச்சம் போட்டுக் காட்டறது. அதான் அனிதா பேரைச் சொல்லி போராட்டம்” அப்படின்னும் பரவலா பேச்சு வரது.  இந்த மாதிரி பேக்குத்தனமா பப்ளிக்கா எப்படித்தான் இவாளால பேச முடியறதோ!

பாருங்கோ, நீட் தேர்வோட தரம் மூணு விதமாத்தான் இருக்கணும். ஒண்ணு தமிழ் நாட்டு பாடத்திட்ட தரத்துக்கு கீழ இருக்கணும், இல்லை இணையா இருக்கணும், இல்லாட்டி அதைவிட உசத்தியா இருக்கணும். அது கீழாவோ இணையாவோ இருந்தா நம்ம மாணவர்களுக்கு நீட் தேர்வு பிரச்சனை இல்லை. ஈசியா எழுதிட்டுப் போறா. நீட் தேர்வோட தரம் நம்ம பாட திட்டத்தை விட உசத்தியா இருந்தா, நம்மளும் மாநில பாட திட்டத்தை தரம் உயர்த்தினா போச்சு. அதைத்தான் மத்த மாநிலங்களும் பண்ணிருப்பா.  தமிழ் நாடு கொஞ்சம் தூங்கிடுத்து. இப்ப முழிச்சுக்கப் போறா. அவ்வளவுதான். இது சிம்பிளான விஷயம்தான? வளவளன்னு பேச இதுல என்ன இருக்கு?  பேச்சும் காரியமும் ’நீட்டா’ இருக்கணும், அதாவது நேர்ப் பேச்சா, ஒழுங்கான செயலா இருக்கணும். பொது வாழ்க்கைல ஜாஸ்தியாவே இருக்கணும். நீட் தேர்வு எதிர்ப்புல அதைக் காணோம்.

நுழைவுத் தேர்வுல தரம் அதிகமா இருந்தாத்தான் கெட்டிக்கார குழந்தைகள் மட்டும் அந்தத் தேர்வுல பாஸ் பண்ணி மெடிகல் காலேஜ்ல  சேருவா. அப்பத்தான் நாட்டுக்கும்  திறமையான டாக்டர்கள் கிடைப்பா. ஆயிரம் பேருக்கு வைத்தியம் பாக்கற டாக்டர், விஷயம் தெரிஞ்சவனா இருக்கணும். அப்படி இருந்தாத்தான் வியாதிக்காராளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். ஆயிரம் நோயாளிகளோட நலன் முக்கியமா, தகுதி குறைஞ்ச ஒரு மாணவனோ மாணவியோ டாக்டர் ஆகி எல்லார்க்கும் சுமாரா வைத்தியம் பாக்கறது பரவால்லயா? எது பொது நலன்?    

பிரத்யட்சமா ஒரு ப்ரூஃபும் சொல்லட்டா? மருத்துவ சேர்க்கைல அதிக தரம் பாக்கறதுனால தான், அமெரிக்கா இங்கிலாண்ட் மாதிரி நாடுகள்ள கெட்டிக்கார டாக்டர்களா  இருக்கா. வேணும்னா சோனியா காந்தியையும் மு.க. ஸ்டாலினையும்  கேளுங்கோ. மருத்துவ பரிசோதனை, ட்ரீட்மெண்ட் அப்படின்னு இந்தியாவ விட்டு அந்த ரண்டு நாட்டுக்கும் பறக்கற அவாளுக்கு நன்னா தெரியும்.

டாக்டருக்குப் படிக்க அனிதாக்கு தகுதியும் திறமையும் கிடையாதுன்னு நான் சொல்லலை. பன்னண்டாம் கிளாஸ் பரீட்சைல 1,200க்கு 1,176 மார்க் எடுத்த அவளுக்கு அந்த தகுதி இருக்கும்னுதான் நான் நினைக்கறேன். ஆனா நீட் தேர்வை எழுதி பாஸ் பண்றதுக்கு அவளை தமிழ் நாட்டு பாடத் திட்டம் சரியா தயார் படுத்தலை. தமிழக அமைச்சர்களும், “நீட் தேர்வுலேர்ந்து இந்த வருஷத்துக்கு தமிழ் நாட்டுக்கு விலக்கு கிடைக்கலாம், கிடைக்கப் போறது, கிடைச்சுடும்”னு பேசிப் பேசி  மாணவர்களோட தயார் நிலையை கலைச்சு விட்டிருக்கா. இது ரண்டுதான் அவ நீட் பரீட்சைல மார்க் வாங்காததுக்கு சிறிசும் பெரிசுமான காரணம். 

”எல்லாம் சரி, அனிதா நீட்ல பெயில் ஆனப்போ நீங்க அவளோட பாட்டியா இருந்தா என்ன சொல்லி அவளைத் தேத்தி இருப்பேள்”னு என்னை யாரும் கேக்கலாம்.  நான் அவளை அணைச்சுண்டு சொல்லிருப்பேன்;  ”அனிதா கண்ணு, அழாத. பிளஸ் டூல 1,176 மார்க் வாங்கிருக்கையே அதுவே உன்னை கெட்டிக்காரின்னு சொல்லும். இப்ப என்ன ஆச்சு? 22 வயசுல நீ டாக்டர் ஆகப் போறதில்ல, அவ்வளவுதான்.  உனக்கு  அந்த படிப்புதான் வேணும்னா, அடுத்த வருஷ நீட் பரீட்சைல நீ இன்னும் நன்னா தயார் பண்ணிண்டு எழுதற கெட்டிக்காரத்தனம் உனக்கு இருக்கு. சென்னைல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டின்னு ஒரு பெண் இருந்தாளே, அவா 21 வயசுல மெடிகல் காலேஜ் சேர்ந்து 26 வயசுலதான் டாக்டர் படிப்பை முடிச்சா. பெரிய பேரும் வாங்கினா.  அவாளை விட நீ இன்னும் சின்ன வயசுலயே டாக்டர் ஆகலாம். அடுத்த வருஷம் நன்னா நீட் எழுத தயார் பண்ணிக்கோம்மா. யார் கூப்பிட்டாலும் கோர்ட் கேஸ்னு அலைஞ்சு மனசை அலட்டிக்காத”.  பேத்தியை நேசிக்கற எல்லா பாட்டியும் அதான சொல்லுவா?
  
* * * * *


Copyright © R. Veera Raghavan 2017