Thursday 16 February 2017

ஜனநாயகத்தின் பாட்டைப் பாருங்கள்!


     எம்.ஜி.ஆர் முன்னிருத்தி அவர் பெயரை உச்சரித்துக்கொண்டு அரசியலில் வளர்ந்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

   ஜெயலலிதாவை ’அக்கா’ ’அம்மா’  என்று போற்றி, தானும் ‘சின்னம்மா’ என்று போற்றப்பட்டு, அரசியலில் இப்போது பெரிதாக வளர முனைகிறவர் சசிகலா. இவர்கள் இருவருக்கும் எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை முறையாக முடிப்பது நீதிபதிகளுக்கே பெரிய சவாலாக இருந்தது. கடைசியில் இந்த இருவரும், இன்னும் வேறு இருவரும், சொத்துக் குவிப்பு என்னும் ஊழல் குற்றத்தைச் செய்தவர்கள், ஆதற்காகக் கூட்டு சதி செய்தவர்கள், உடந்தையானவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால் சசிகலாவோ, அல்லது அவரிடம் பயத்தையும் பவ்யத்தையும் தொடர்ந்து காட்டும் பெருவாரியான அதிமுக எம்.எல்.ஏக்களோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கூட அங்கீகாரமும் மதிப்பும் காட்டியதாக ஒரு அறிகுறியும் இல்லை. மாறாக, பொதுவாழ்வில் ஒழுக்கமும் தூய்மையும் தேவையே இல்லை என்கிற தோற்றம்தான் தந்திருக்கிறார்கள். இது சரியான செயல் என்றால், எதிர்க் கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வேறொரு ஊழல் வழக்கில் தீர்ப்பளித்து, அந்தக் கட்சியினரும் அப்படியான தீர்ப்பை உதாசீனம் செய்து குற்றவாளித் தலைவரைக் கொண்டாடினால் அதையும் அதிமுக-வினர் நியாயம் என்பார்களா? மாட்டார்கள்.


      சாதாரண  செருப்புத்  திருடன் கூட,  பிடிபட்டால் அவமானம் அடைகிறான். ஆனால் ஜெயலலிதாவும் அவர் தோழி சசிகலாவும் முறையற்ற வகையில் பெரும் சொத்து சேர்த்த குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றமே ஊர்ஜிதம் செய்த பின்னும், சசிகலா எந்தக் குற்ற உணர்வும் இல்லாது பவனி வந்தார். ’உச்ச நீதிமன்றம்தான் ஏதோ தப்பு செய்துவிட்டது, நீதிமன்றத்தை மன்னித்துவிடலாம்’ என்பது போல்தான் அவரும் அவரைச் சார்ந்த அதிமுக-வினரும் காட்சி தந்தனர். ஜெயில் தண்டனையை அனுபவிக்க சசிகலா பெங்களூருவுக்குச் செல்லும்போதும், அவர் காசிக்குப் புண்ணிய யாத்திரை போவது மாதிரியான சில வழிபாடுகளை இரண்டு நினைவிடங்களில் ஆதரவாளர்கள் புடைசூழ நிதானமாகச் சென்னையில் நிகழ்த்திவிட்டுப் புறப்பட்டார். அவர் ஜெயிலுக்குப் போன பின், ‘தியாகத் தாய் சின்னம்மா’ என்ற கோஷமும் எழுப்பி அவர் கட்சியினர் அவரைப் புகழ்கிறார்கள்.  இன்னும் என்னவெல்லாம் காணக் கிடைக்குமோ?

    எம்.ஜி.ஆர் திரையில்  பாடிய ஒரு பிரபலமான பாட்டின் முதல் இரண்டு வரிகள் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றன. அவை: “நான்……… செத்துப் பொழச்சவண்டா. எமனை, பாத்து சிரிச்சவண்டா”.  மறைந்தவர் என்பதால் ஜெயலலிதாவை இந்த விஷயத்தில் விட்டுவிட்டு, சசிகலா இந்தப் பாட்டை எப்படி ஆரம்பிப்பார் என்று கேட்டால், இப்படிச் சொல்லலாம்: “நான் ……… சொத்துக் குவிச்சவடா! கோர்ட்டை, பாத்து சிரிச்சவடா!” 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017



Monday 13 February 2017

சசிகலாவா பன்னீர்செல்வமா?


       சசிகலாவா பன்னீர்செல்வமா? யார் ஜெயலலிதாவுக்குப் பின் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வர வேண்டும்? இப்போது மாநிலம் தீர்வு தேடும் பிரச்சனை இது.

        பன்னீர்செல்வமே    முதல்     அமைச்சராகத்    தொடரவேண்டும்,  சசிகலா வேண்டாம், என்பவர்கள் பிரதானமாகச் சொல்வது: ”சசிகலா அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் வந்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அரசாங்க முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி அதன் பயன்கள் எங்கோ போகும். பன்னீர்செல்வத்திடம் அந்தக் குறையோ ஆபத்தோ இல்லை. தவிர, பன்னீர்செல்வம் எளிமையானவர். சசிகலா மாதிரி, கும்பிடு போடுபவர்களை எதிர்பார்க்கும் தலைக்கனம் கொண்டவர் அல்ல. அது மட்டுமல்ல, சசிகலா எதிரியாக உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வரப்போகிறது, அதில் அவர் குற்றவாளி என்றாகித் தண்டனை அடைந்தால் அவர் உடனே பதவி விலகவும் ஏற்படும். ஆகையால் சசிகலா முதல் அமைச்சராகக் கூடாது, பன்னீர்செல்வம்தான் வரவேண்டும்.”

      சசிகலா முதல் அமைச்சராகப் பதவி ஏற்கவேண்டும் என்பவர்களின் வாதம்: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை எட்டுவதற்கான ஆதரவு, அதிமுக எம்.எல்.ஏக்கள் வாயிலாக அவருக்கு இப்போதுவரை உள்ளது.  இது வலிமையான வாதம். ஆனால் அந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் சுதந்திரமாக வாக்களிக்கும்போது பன்னீர்செல்வம் ஜெயிக்கிற அளவுக்கு அவருக்கே ஆதரவு தந்தால் அவர்தான் முதல்வர். ஆக இதெல்லாம் வெறும் எண்ணிக்கை விவகாரம். சட்டசபையில்  ஓட்டெடுப்பு நடந்தால் இது தெளிவாகும். அதில் வெல்கிறவர் முதல்வர் ஆவார். இருவருக்குமே எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு சட்டசபையில் கிடைக்காமல் போனால் சட்டம் வேறு தீர்வை வைத்திருக்கிறது.  இது போக,  பரவலாகப் பேசப்படாத விஷயங்கள் சிலவும் இதில் முக்கியமானவை. அதற்கு முன் சில சங்கதிகளைப் பார்க்கலாம்.   

        ’அண்ணாவின் ஆட்சியை நாங்கள்தான் அமைத்தோம், அல்லது அமைப்போம்’ என்று திமுக-வும் சொன்னது, அதிமுக-வும் சொன்னது. ஆனால் அண்ணா வேறு, கருணாநிதி வேறு, எம்.ஜி.ஆர் வேறுதான். இப்போது ’அம்மாவின் ஆட்சியை நாங்கள்தான் நிறுவுவோம்’ என்று சசிகலாவும் பன்னீர்செல்வமும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா வேறு, சசிகலா வேறு, பன்னீர்செல்வம் வேறுதான். மறைந்தவரின் பெயரைச் சொல்லி, ’அவரது ஆட்சியை நான் தருவேன்’ என்று எந்த அரசியல்வாதி சொன்னாலும் அந்தப் பேச்சில் உண்மை இருக்காது, தந்திரம்தான் இருக்கும். அரசியலிலும் ஆட்சியிலும் தந்திரம் தேவைதான்.  ஆனால் அதையும் தாண்டி, செயல் பேசவேண்டும். அதுதான் முக்கியம்.  ஆனால் பேசுவதுதான் பெரிய செயல் என்று தமிழ்நாட்டில் ஆகிவிட்டது.

       தீவிர  அரசியலுக்குப்  புதியவரானாலும்,  தனது 70-வது வயதில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகிறார். அதுவே ஜனநாயகத்தில் சாத்தியமாகிறது. அப்படி என்றால் 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவின் உதவியாளராக அவருக்கு மிக நெருக்கமாக இருந்து, கொல்லைபுற அரசியலில் காதோ காலோ வைத்திருந்த சசிகலா தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக நினைப்பது ஜனநாயகத்திற்கு முரண்பட்டதல்ல.  ஆனால் அந்தப் பதவியை அடைந்து  மாநில அரசாங்கத்தை வழி நடத்த இவர் சிறந்தவரா என்பது வேறு விஷயம்.  இந்தக் கேள்வி பன்னீர்செல்வத்தை நோக்கியும் வரும்.

        ’சசிகலா    முதல்வராக   வந்தால்   அவர்    குடும்பத்தினர்   சிலர் அரசாங்க முடிவுகளில் – அரசு ஒப்பந்தங்கள் உட்பட – மூக்கை நுழைத்து அது இது செய்வார்கள், தமிழக அரசின் வருவாய் பெரிதும் குறையும்’ என்கிற எதிர் அணியின் குற்றச்சாட்டு, பொதுமக்கள் பலரின் மனதிலும் எதிரொலிக்கலாம்.  ஆனால் பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்ந்தால் அந்த ஆட்சி சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைக்காது.  இதை மேலும் விளக்கலாம்.

  தற்போதுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்  அனைவரும்  சடாரென்று பன்னீர்செல்வத்துக்குத் தங்கள் ஆதரவை அளித்து அவரை முதல்வர் ஆக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பன்னீர்செல்வத்தின் கீழ் யார் யார் அமைச்சர்கள் ஆவார்கள்?  அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவையே முதல்வர் ஆக்கியிருந்தால், அப்போது சசிகலா ஆட்சியில் எந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆவார்களோ, அவர்கள்தான் அனேகமாகப் பன்னீர்செல்வம் ஆட்சி அமைத்தாலும் அமைச்சர்களாக இருப்பார்கள்.   இருவரில் ஒருவர் முதல்வராக ஆனால் அந்த அமைச்சர்கள் ஊழல் அமைச்சர்களாக இருப்பார்கள், மற்றவர் தலைமை ஏற்றால் அதே அமைச்சர்கள் மிகச் சரியாக, நேர்மை தவறாமல் வேலை செய்வார்கள் என்று வராதே?   இருவரின் ஆட்சியிலும் அமைச்சர்கள் பெரிதும் வேறு வேறானவர்கள் ஆனாலும், தமிழ்நாடு பல வருடங்களாகப் பழக்கப் பட்ட அடிப்படை அமைச்சர் குணம் மாறாது.  இருவரில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் நேர்மை ஓங்கி நிற்கும் என்ற தோற்றம் நமக்குக் கிடைக்கவில்லை.

     பன்னீர்செல்வம்  ஏன் சசிகலாவை எதிர்க்கிறார்? தான் முதல் அமைச்சர் ஆவதற்குத் தடையாக சசிகலா திடீரென்று வந்துவிட்டாரே என்று அவருக்குத் தாமதமாகத் தோன்றியதுதான் காரணம்.  சசிகலாவின் குடும்ப சொந்தங்கள் அவரிடம் இருந்து ஏற்கனவே விலகிப் போயிருந்தால், அப்போது பன்னீர்செல்வம் சசிகலாவைக் கடைசிவரை எதிர்க்காமல் சசிகலாவே மீதமுள்ள நாலரை ஆண்டுகளும் முதல்வராக இருக்க ஆதரவு கொடுப்பார் என்பது நிச்சயமா? இல்லை. பன்னீர்செல்வத்தின் முதல்வர் ஆசை தவறானதும் அல்ல.   ஆனால் அது நிறைவேறினாலும், தமிழ் நாட்டு ஆட்சியில் நேர்மையும் திறமையும் எழுந்து நிற்கும் என்பதற்கான தெளிவான அறிகுறி இல்லை.

           தமிழக ஆளுனர் எவரையும் ஆட்சி அழைப்பதற்கு முன்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து அது சசிகலா முதல்வராகத் தடையாக இருந்தால், பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இன்னும் கூடி சசிகலா தரப்பை மிகவும் பலவீனப் படுத்தும்.  அது எப்படி அமைந்தாலும் இதைச் சொல்ல வேண்டும்.

     அதிமுக-வில் சசிகலா பெற்ற எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவர்மேல் உள்ள நம்பிக்கையினாலோ மரியாதையினாலோ ஏற்பட்டதில்லை.  ’கட்சிக்குள் யாருமே எதிர்க்காமல் இருக்கும் இவரை நாம் ஆதரிக்காவிட்டால் நம் கதி என்னாகுமோ’ என்கிற கிலியில்தான் பலர் அவரை ஆதரித்திருப்பார்கள்.  எம்.ஜி.ஆர் இருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏக்களும் கட்சித் தலைவர்களும் கடவுளைக் காண்கிற பரவசத்தொடு அவரை அணுகினார்கள். ஜெயலலிதா தலைமை ஏற்றபிறகு அவர் மறையும் வரை அவரிடம் எம பயம் காட்டி வளைந்தார்கள்.  பின்னர் சசிகலா கட்சியில் தலை எடுத்தவுடன் அவரை எம துதராகப் பாவித்துக் கைகூப்பி அவரிடம் நடுக்கம் கொள்கிறார்கள்.  இப்போது பன்னீர்செல்வம் தனி அணியாக நின்ற பின் அவரிடம் வந்து சேரும் கட்சித் தலைவர்களும் எம்.எல்.ஏ-எம்.பிக்களும் அவர் பக்கம் தலை நிமிர்ந்து நின்று அவரிடம் பொன்னாடை வாங்கிக் கொள்கிறார்கள். பன்னீர்செல்வம் பரவலான ஒரு அனுதாபத்தை ஈர்க்கிறார்.  

       தான் முதல் அமைச்சராக இருக்கும்போது கூட, கட்சியில் இருக்கும் அடுத்த கட்டத் தலைவரை, மனிதனாக மதிக்கும் பன்னீர்செல்வத்தின் பண்பு அதிமுக-வில் பல வருடங்கள் தென்படாத ஒன்று. அத்தகைய பண்பு கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரையும் கவர்ந்து, அதன் விளைவாக சசிகலா தரப்பிலிருந்து பலர் பன்னீர்செல்வத்திடம் வந்து சேர்ந்திருப்பது அதிமுக-வில் ஒரு நல்ல அரசியல் பண்புக்குக் கிடைத்த வெற்றி.  இது சசிகலாவிடமிருக்கும் செருக்கையும் சற்றுக் குறைத்து அவர் பக்கமிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் முதுகையும் ஓரளவு நிமிர்த்தும்.

    ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராகச் சிறப்பாகவும் கண்ணியமாகவும் செயல்பட்டிருக்கிறார். இப்போது சசிகலாவுடன் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது அணிக்கு வரும் கட்சியினரைப் பணிவாகக் கனிவுடன் நடத்துகிறார்.  இதெல்லாம் டெலிவிஷனில் தமிழ்நாடே பார்த்தது. மாநிலம் முழுவதும் மக்கள் பன்னீர்செல்வத்தை விரும்புவது முன்னைவிடவும் – அதாவது ஜெயலலிதா காலத்தை விடவும் - அதிகமாகிறது. ஆகையால் அவருக்கு அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள்-எம்.பிக்கள் ஆதரவு கொடுத்தால் அவர்களுக்குத் தொகுதிகளில் மக்கள் ஆதரவு இன்னும் கூடும் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் கவிஞனின் கற்பனையாக ஒன்றை நாம் ஆனந்தமாக நினைத்துப் பார்க்கலாம்.   அது இதோ.

        அதிமுக எம்.எல்.ஏக்கள்  ஆதரவுடன் பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்கிறார். அதில் பங்கு பெறும் அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, ”நீங்கள் நேர்மை தவறக்கூடாது. உங்கள் துறைகளில் முறைகேடுகள் எதுவும் நேராமல் விழிப்புடன் கவனியுங்கள். தவறினால் என்னிடமிருந்து நடவடிக்கை வரும். இந்த நல் நடத்தையை உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று எச்சரிக்கை சொல்கிறார். அதோடு, “நேர்மையான ஆட்சியைக் கொடுப்பேன்” என்று மக்களிடமும் பகிரங்கமாகப் பேசி அமைச்சர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் லஞ்ச-ஊழல் எண்ணத்தை மட்டுப் படுத்துகிறார். தமிழகத்தின் சில பல்கலைக் கழகங்களிலாவது அறிவில் சிறந்த நேர்மையானவர்களைத் துணைவேந்தர்களாக நியமிக்கிறார். இவையெல்லாம் ஆட்சியில் பலனும் தருகின்றன. . . . . . .

         அரசாங்கத்தில் அசாதாரணத் திறமையைக் கொண்டு வர முடியாவிட்டாலும் நேர்மையைப் புகுத்துவதே பொது நலனைப் பெரிதும் உயர்த்தும்.  இதைச் செய்ய முடியும் என்பதைக் கூட, சசிகலாவை விடப் பன்னீர்செல்வத்திடம் தான் நினைத்தாவது பார்க்க முடியும். பன்னீர்செல்வம் முதல்வராக வருகிறாரோ இல்லையோ, வந்தாலும் இவ்வகையில் செயல்படுவாரோ இல்லையோ, இப்படிக் கவிஞனின் கற்பனையாக நம் மனம் சிறகு விறித்து மகிழ்வது என்ன ஒரு இனிமை! இன்றைய ஜனநாயகத்தில் இப்படித்தான் நமக்கு ஆனந்தம் வாய்க்குமோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017


Monday 6 February 2017

சசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது


       சிலர் விரும்பியது நடக்கப் போகிறது. சிலர் பயந்ததும் நிகழப் போகிறது. சசிகலா தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆகப் போகிறார். அதிமுக-வின் தமிழக எம்.எல்.ஏக்கள் அவரை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து, அந்த வைபவம் அரங்கேற வழி செய்திருக்கிறார்கள். அதை முன்னிட்டு பன்னீர்செல்வமும் தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

    தனக்குப் பிறகு அதிமுக-வின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் சசிகலா வரவேண்டும் என்று மறைந்த ஜெயலலிதா விரும்பி இருப்பாரா? இல்லை, அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன்னுடன் நெருங்கி இருந்தாலும் சசிகலாவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் எப்போதும் பதவி கொடுக்கவில்லை.   பதவி ஏதும் கொடுத்தால் சசிகலா மெள்ள மெள்ள தனக்குப் போட்டியாக கட்சிக்குள் வளரலாம் என்றுகூட ஜெயலலிதா நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஜெயலலிதா சசிகலாவுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லை.  அப்படியானால், ஜெயலலிதா இருந்தவரை அவரிடம் அடங்கி ஒடுங்கி அவர் புகழ் பாடிய அதிமுக எம்.எல்.ஏக்கள், அவர் மறைவுக்குப் பின் ஏன் சசிகலாவின் இத்தகைய ஏற்றத்திற்கு உடன்படுகிறார்கள்? இதற்கான பதிலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் ஒரு கடந்த கால நிகழ்சியைப் பார்த்துவிட்டு வரலாம்.

             பிரதமர்   ஜவஹர்லால்    நேரு    மறைந்த  பிறகு  அவரின் தனி உதவியாளர் எவரும் - நேருவுடன் சேர்ந்து அவரும் சிறை சென்றிருந்தாலும் - இந்தியாவின் பிரதமராக ஆகி இருக்க முடியாது, அப்படி நடக்கவும் இல்லை.  நேருவும் அதை நினைத்துப் பார்த்திருக்க முடியாது.  நேருவை விடக் கட்சியில் அதிக அதிகாரத்துடன் இருந்த ஜெயலலிதாவும் அது மாதிரியான ஒரு தலைமை மாற்றத்தைத் தன் கட்சியிலும் விரும்பாத போது, அது அதிமுக-வில் நடக்கிறது.  அதற்கு ஒரே காரணம் நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் இருந்தது, ஜெயலலிதாவின் அதிமுக-வில் அது இல்லை. நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் தழைக்க நேருவின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம்.  ஜெயலலிதாவின் அதிமுக-வில் ஜனநாயகம் நலிய ஜெயலலிதாவே காரணமாக இருந்தார்.

      பழைய காலத்துக் காங்கிரஸ் கட்சி நேருவின் மறைவுக்குப் பின் நாட்டு நன்மையையும் கட்சியின் ஜனநாயகப் பண்புகளையும் கருத்தில் கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியை அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.  தான் பிரதமராக இருக்கும்போதே இறந்தால், ஆட்சியில் தலைமை மாற்றம் நேர்வது இந்த முறையில்தான் அமையவேண்டும் என்பது நேருவின் விருப்பமாகவும் இருந்திருக்கும்.  எதேச்சாதிகாரம் மிகுந்த ஜெயலலிதாவின் அதிமுக-வில், எதேச்சாதிகார அதிபதியும் அவரை அண்டியிருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் தனக்கு எது பிடிக்குமோ, அதற்கு எது உகந்ததோ – ஆதிக்கம் செலுத்துவதோ, அதன் கீழ் தழைப்பதோ – அதைத்தான் செய்வார்கள்.  அந்தக் கட்சியின் அதிபதி மறைந்தபின் அதன் அடுத்த கட்டத் தலைவர்கள் கட்சியில் எந்த மனிதரின் கீழ் சேவகம் செய்து தாங்கள் நிலைப்பதும் தங்கள் நலனைக் காப்பாற்றுவதும் சுலபமோ, அவரைத்தான் தலைவராகக் கொண்டாடுவார்கள், ஆதரிப்பார்கள். ஆகவே சசிகலா முடிந்தவரை அடுத்த அதிபதியாக இருக்க ஆசைப் படுவதும், எம்.எல்.ஏக்களும் மற்ற தலைவர்களும்  அவர் தலைமையை ஏற்பதும், அவர்களின் மாறாத இயற்கை குணங்கள். இருந்தாலும் ஜெயலலிதா பெற்றிருந்த தனிப்பட்ட மக்கள் செல்வாக்கில் சிறிதளவும் பெறாதவர்கள் மற்ற அதிமுக-வினர், சசிகலா உட்பட.  ஜெயலலிதாவுக்குப் பின் அவர் அமைத்த ஆட்சியை அதிமுக-வில் யார் முதல்வராகித் தொடர்ந்தாலும், திக்-திக் மனதோடுதான் ஆட்சி செய்யவேண்டும்.  யார் காலை எவர் எப்போது வாருவார்களோ?

       பல விமரிசகர்களும், சில எதிர்க் கட்சித் தலைவர்களும் சசிகலாவைவிட பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர், பன்னீர்செல்வமே தொடரலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு சாதுவான கைப்பாவையாகத்தான் விரும்பிச் செயல்படுவார்.  ஏற்கனவே ஜெயலலிதாவின் நிழலாக முதல் அமைச்சர் பதவியில் இருந்த மாதிரி, இப்போது சசிகலாவின் சார்பாகத்தான் அந்தப் பதவியில் இருப்பேன் என்று அவரே தெளிவாகத் தன்னைக் காண்பித்திருக்கிறார்.  அசல் நடிகரே கேமராவுக்கு முன் வந்து நடிக்கிறேன் என்கிறபோது டூப் நடிகர் எதற்கு? 

              இன்னொரு விஷயம்.  சோனியா காந்தியின் பிரதிநிதியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பின்னால் இருந்தவரின் மருமகன் மீது எவ்வளவு ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றச் சாட்டுகள் வந்தன?  பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அது மாதிரியான குற்றச்சாட்டுகள் பலர்மீதும் எழத்தானே செய்யும், அவை எளிதில் வெளிச்சத்துக்கு வராத தடுப்புக் கவசமாகத் தானே அவரும் இருக்க நேரிடும்?  ஆகையால் சசிகலாவுக்குப் பதில் பன்னீர்செல்வம் முதல்வராக – அதாவது சசிகலாவின் சொல்பேச்சைக் கேட்கும் முதல்வராக – இருக்கட்டும் என்பதில் அர்த்தமில்லை.  

      ‘எனக்குப் பிடித்தமானவர் எதேச்சாதிகாரியாக இருந்தால் பரவாயில்லை. அவரைப் போற்றுவேன்.  ஆனால் எனக்குப் பிடிக்காதவர் அப்படியாக வந்தால் நான் எதிர்ப்பேன்’ என்று பரவலாகப் பல மக்களும் அப்பாவித்தனமாக எண்ணுகிறார்கள். மக்களின் அந்த எண்ணம் மாறும் வரை, அரசியல் சட்டம் அளிக்கும் ஜனநாயகம் அவர்களுக்குச் சிறிய நன்மைகளே தரும். எதேச்சாதிகாரர்களுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், அவரைப் போற்றும் கட்சியினருக்கும்தான் பெரு நன்மைகள் செய்யும்.  இது எதோ ஜெயலலிதாவையும் அதிமுக-வையும் மட்டும் நினைத்து சொல்லப் படுவதில்லை.  வேறு பல தமிழக கட்சிகளுக்கும், வெளி மாநில கட்சிகளுக்குகும் இது பொருந்தும்.  இன்றைய காங்கிரஸ் கட்சியே வருத்தம் தரும் உதாரணம்.

          ’எல்லாம்  சரி.   சொத்துக்   குவிப்பு   வழக்கில்  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எப்போதும் வரலாமே, அது சசிகலா முதல் அமைச்சராகத் தொடர்வதற்குத் தடையாக இருக்கலாமே?’, என்று யாராவது கேட்டால், சசிகலா ஆதரவாளர்களின் மனதில் இப்படி ஒரு பதில் ஓடலாம்: “ஒன்றும் பிரச்சனை இல்லை. சமத்தான ஒரு டூப் முதல்வரை அமர்த்திவிட்டு, சசிகலா தியாகி பட்டம் வாங்கிக் கொள்ளலாம். நமது ஜனநாயகத்தில், சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர் சிறை சென்றுவந்து, பின்னர் முதல் அமைச்சர் ஆவது கடினம்.  ஆனால் ஒரு பெரிய பதவியில் இருக்கும் போதே அவர் சிறை செல்ல நேர்ந்தால், பதவியைத் துறந்த தியாகி என்ற பெயரோடு அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு பெருகும்.  பின்னர் அவர் வெளிவந்து தேர்தலில் போட்டியிடும் போதுகூட, பலரையும் எம்.எல்.ஏ-க்கள் ஆக்கி அவரும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம்!” எனது ஊகம் உங்களுக்கும் தோன்றினால் புன்னகைப்பீர்கள்.  இல்லை என்றால் முகம் சுளிப்பீர்கள்.  எது உங்கள் முகபாவம்?
* * * * *

Copyright © R. Veera Raghavan 2017