Tuesday 8 November 2016

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துச் சொன்ன உண்மை


       இது சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்தி. உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஒரு போலீஸ்காரர் தாமதமாகப் பணிக்கு வந்தார்.  அவர் மீது கோபம் அடைந்த உயர் அதிகாரியான ஒரு இன்ஸ்பெக்டர் அந்தப் போலீஸ்காரரைக் கன்னத்தில் அறைய அவர் மயக்கமுற்று விழுந்தார். வராத செய்தி என்னவென்றால், அந்த இன்ஸ்பெக்டர் ஒரு உண்மையை அடித்துச் சொல்லியிருக்கிறார்.

   தமிழ்நாடு அல்லாமல்  வேறு மாநிலத்திலிருந்து  இந்த பளார் செய்தி வெளிப்பட்டாலும் வியப்பில்லை.  ஏனென்றால் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் துர்குணங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன.  சரி, அதற்கும் வேலைக்குத் தாமதமாக வந்த போலீஸ்காரரை ஒரு உயர் அதிகாரி கன்னத்தில் விட்டதற்கும் சம்பந்தம் உண்டா? உண்டு.

      போலீஸ் துறையை விடுங்கள். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வணிக வரித்துறை என்று வேறு எந்தத் துறையையும் எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டின் பிற அங்கங்களான சட்டசபை மற்றும் நீதித்துறையையும் கணக்கில் கொள்ளுங்கள்.  இந்தத் துறைகளின் தலைவர்களோ அவர்களுக்கு அடுத்தடுத்து இருக்கும் அதிகாரிகளோ தங்களுக்குக் கீழே பணிபுரியும் எந்த ஒரு ஊழியரையும் கைநீட்டி அடிக்க முடியுமா – அதுவும் தாமதமாக ஆபீசுக்கு வந்ததற்காக?   

        போலீஸ் துறையில் மட்டும் ஏன் இப்படி ஒரு அநியாயம் சாதாரணமாக நடக்க முடிகிறது?  அதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும் பெருவாரியான அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் பலரையும் நெறி தவறவைத்து, விதிகளை மீற வைத்து, அநியாயமும் அடாவடியும் கூட செய்யவைக்கிறார்கள். இவற்றை அனேகமாக காதும் காதும் வைத்த மாதிரி கமுக்கமாகச் செய்து முடிப்பது போலீஸ் பணியில் இருப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.

     ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தங்களது சொந்த ஆதாயத்தை வளர்த்துக் கொள்ளவும், தங்களுக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்கவும், தங்களின் அரசியல் எதிரிகளை இம்சிக்கவும் போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்துவது இந்தியாவில் பரவலாக நடக்கிறது. இந்த வேலைகளுக்கு போலீசார் அளவிற்கு மற்ற துறை அதிகாரிகளைப் பயன்படுத்த இடமுமில்லை. உடன்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு வேண்டிய இடத்தில் பணி, பதவி உயர்வு மற்றும் சில ருசியான பலன்கள் கிட்டும்.  மற்றவர்களுக்கு நேர்மையும் போலீஸ் திறமையும் இருந்தாலும் ஏதோ மாவாட்டுகிற மாதிரியான பணியும் அதோடு சேர்ந்த எச்சரிக்கையும் கிட்டும். இதுபோக, ஆள்பவர்களின் சொல்லுக்கு இணங்கத் தயாரானவர்கள் சிலரையும் போலீஸ் வேலையில் சேர்ப்பது உண்டு. இவ்வாறு ஆசை காட்டி ஈர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகள், தங்கள் எஜமானர்களின் அநியாய, அக்கிரம ஆசைகளுக்குத் தெரிந்தே துணை நிற்கிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் மிகுந்த இந்தியாவில், ஆளும் அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகளை நிர்பந்தித்து கைப்பாவைகளாக ஆட்டுவிப்பது இன்னும் எளிதாக இருக்கிறது.

        இப்படி ஆக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பொது மக்களிடமும் தங்களின் கீழ் வேலை செய்யும் மற்ற பணியாளர்களிடமும் நிதானமாகவோ நியாயமாகவோ நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.  இவர்கள் கற்ற குரூரமும் கயமையும் இவர்களின் கீழ் வேலை செய்பவர்கள் பலரையும் தொற்றிக் கொள்ளும்.  அது இன்னும் கீழே உள்ளவர்கள் மேல் செலுத்தப்பட்டு மேலும் பலரை அவமதிக்கும், காயப்படுத்தும்.

      போலீஸ் அதிகாரிகளை ஏவலுக்கு ஆளாக்கி அவர்களின் பணி ஒழுக்கத்தைக் குலைத்த அரசியல்வாதிகள், ஒருவகையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஊக்குவித்த அந்நாட்டு ராணுவத் தலைவர்கள் மாதிரிதான்.  அந்த ராணுவத் தலைவர்கள் முக்கியத்துவம் பெறவும் இந்தியாவில்  நாசவேலைகள் அரங்கேறவும் அங்கு விசேஷமாக வளர்க்கப்பட்ட தீவிரவாதிகள், தாங்கள் பயின்ற ஆயுதம் ஏந்திய அராஜகத்தை தங்களுக்குள் சிறிதும், பாகிஸ்தான் மக்களுக்கு எதிராகப் பெரிதும் பிரயோகிப்பார்கள்.  அந்தச் செயல்களை அந்நாட்டு ராணுவ அதிகாரிகளே கட்டுப் படுத்த முடியாது – அவர்களோ அல்லது பின் வரும் அதிகாரிகளோ மனம் மாறும் வரை.  இதற்கு இணையாக நமது போலீஸ் துறை எதனால் எந்த அளவு பாதிப்படைந்திருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்கலாம்.

     வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை,  வணிகவரித்துறை மற்றும் போலீஸ் துறைகளுக்கு இதுவரை செல்லாதவர்களையும் கேட்டுப் பாருங்கள் – அதாவது அவர்கள் எந்தத் துறை அலுவலகத்தில் காலடி வைக்கத் தயங்குவார்கள் என்று. ‘போலீஸ் துறை’ என்பது பெரும்பாலோரின் உள்ளுணர்வின் பதிலாக இருக்கும். இருந்தாலும் போலீஸ்காரர்களைச் சுயநலத்திற்காகக் கையாளும் அரசியல்வாதிகள்தான் அதற்கான பழியைப் பெரிதும் ஏற்கவேண்டும். இந்த அடிப்படை உண்மை அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கைவீச்சிலும் பிரதிபலிக்கிறது அல்லவா?
* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

4 comments:

  1. நீங்கள் சொல்வது உண்மை தான். எல்லா துறைகளிலும் அரசியல் வாதிகள் பல்லாண்டு பல்லாண்டுகளாக மூக்கை நுழைக்கிறார்கள். போலீஸ் அதிகப்படியாக உதவும், ஆள் வச்சு அடிக்க. அதனால் தான் இந்த அவலங்கள் என்றால், புத்தி கெட்டு கழுதை கூப்பிட்டால், அரபிக்குதிரை அடி பணியலாமா?
    2. பத்திரிகையில் முழு தகவல் வந்ததா?

    ReplyDelete
  2. Dear Sir,
    You have analysed the reasons very well.
    What should be the remedy? There have been so many commissions on Police Force-but to no avail.
    Can not the Government bring it under an independent governing body- giving it an autonomous status; and making it accountable for all its actions &also shielding it from the abuse by political forces/leaders. If there is a will there is a way.

    ReplyDelete
  3. Sir: I am really surprised that an Inspector of Modern Age,is so conscientious!!....I feel he should be having some other reason and this reason is a pretext .

    In other departments, the seniors will beat up the subordinates for being on time!! No body wants any employee coming in time in Government Offices!!.

    ReplyDelete
  4. Absolutely. On a larger National Interest, we should such methods (or even better) on ALL anti-Nationals, SICKULARISTS & others who keep shouting anti_indian slogans from roof-tops. Of course extreme methods like encounters are the ONLY methods that need to be used against terrorists, Maoists & ALL other anti-Nationals. It is a TOTAL waste of time to take the matter to courts etc. I have no hesitation in calling the Congress, SP, BSP, Communists of all hues, VCK & all Muslim parties as anti-National. It is great pity that Congress party in its erstwhile form (Present Congress party has NOTHING AT ALL TO DO WITH the original party) had great patriotic selfless leaders , now has ONLY extremely selfish, low calibre anti-Hindu, anti-National "leaders"!

    ReplyDelete