Monday 14 March 2016

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: மல்யா மகாத்மியம்


விஜய் மல்யா சார், ஒரு விமானக் கம்பெனி ஆரமிச்சா அத ஒழுங்கா நடத்தறது எவ்வளவு பிரயோஜனம்னு இப்ப தெரிஞ்சதா? எதுக்கு சொல்றேன்னா, இந்தியாவுலேர்ந்து ஒருத்தர் ராவோட ராவா லண்டனுக்கு ஓடணும்னா ஏதோ ஒரு விமானக் கம்பெனி கடைய மூடாம விமானத்தைப் பறக்க விட்டாத்தான அது முடியும்?

உங்கள நம்பி கடன் குடுத்த பாங்குக் காரா 9000 கோடி ரூபா போச்சேன்னு கையைப் பிசைஞ்சிண்டிருக்கா.  நீங்களோ இங்கிலாண்ட் மாளிகைல ஹாய்யா ரெஸ்ட் எடுத்திண்டிருக்கேள்.  ஒரு நாட்டுல தொழில் பண்ணி பெருசா நஷ்டப்பட்டாலும் தப்பிச்சு வாழறதுக்கு இன்னொரு நாட்டுல ஜரூரா ஏற்பாடு பண்ணிக்கணும்னு  தப்பு தொழிலதிபர்களுக்கு ப்ராக்டிகலா காட்டிருக்கேள். உங்க கம்பெனி திவாலானத விட இது ரொம்பக் கேடு பண்ற உதாரணம்னு எனக்குத் தோண்றது. 

கடன் குடுக்கறவா நீர்மோர் மாதிரி அள்ளி அள்ளிக் குடுத்தா வாங்கிக்கறவா சாப்டுட்டு ஏப்பம்தான் விடுவா.  இதயே நீங்க வேற வார்த்தைல சொல்லி 9000 கோடி நஷ்டத்துக்கு நீங்க பொறுப்பில்லன்னு பேசிருக்கேள்.  “கடன்ல தவர்றது வியாபார விஷயம்.  எல்லா ரிஸ்கும் தெரிஞ்சுதான பாங்க் கடன் குடுத்தது? கடன் குடுக்கறதப் பத்தி நாங்க ஒண்ணும் முடிவு பண்றதில்ல. அவங்கதான் அந்த முடிவை எடுக்கறாங்க” அப்படின்னு விளக்கம் சொல்லிருக்கேள்.  உங்க கெட்டிக்கார வியாக்கியானத்துக்குள்ள ஒண்ணு ரண்டு சோக விஷயமும் இருக்கு.

நீங்க பல பிசினஸ் பண்ணிருக்கேள். அதுல ஒண்ணு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனி.  அது படுத்துப் போய் பாங்குகளுக்கு ஏற்பட்ட நஷ்டம்தான் இப்ப வரைக்கும் 9000 கோடி. அதாவது, உங்க கம்பெனிக்கு பதிலா அந்த பாங்குகளே ஏர்லைன்ஸ் பிசினஸ் பண்ணி நஷ்டம் அடைஞ்சா மாதிரி நிக்கறதுகள்.  நீங்க பாங்க் பிசினஸ் பண்ணி கடன் குடுத்து இப்படி நஷ்டப்பட்டா என்ன விளக்கம் சொல்வேள்? “கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனிக்கு இந்த அளவுக்கு கடனே குடுத்திருக்க மாட்டேன்.  ஒரு அளவோட நிறுத்திண்டு அதோட சொத்து பத்தெல்லாம் ஏலத்துக்குக் கொண்டு வந்து கடனை முடிஞ்ச வரைக்கும் வசூல் பண்ணிருப்பேன்.  தொழில்னா என்ன, அதுல வர்ர லாப-நஷ்டம் என்ன, ஏறிண்டிருக்க கடன் சுமை என்னன்னு விவரம் தெரிஞ்ச பாங்க் ஆளாத்தான் நான் இருப்பேன்.  சும்மா தூக்கி தூக்கி குடுக்க மாட்டேன்”ன்னுதான் இந்த கேள்வியே எழாம பதில் சொல்லுவேள். இல்ல, வெளில எப்படிச் சொன்னாலும் உள்ளுக்குள்ள இப்படித்தான் நினைச்சுப்பேள்.

”வாங்கின கடனை அடைக்கலயே, பாங்குகளுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்?  இது தேசத்துக்கும் நஷ்டமாச்சே”ன்னு துளிக்கூட வருத்தம் உங்களுக்கு இல்லை. ஒரு வேளை, வருத்தப் படறா மாதிரி பேசினா நம்ம பேர்லயும் தப்பு இருக்குன்னு ஆயிடுமேன்னு நினைச்சு ‘பாங்க் நஷ்டத்துக்கு பாங்க்தான் காரணம்’னு சொல்லி பாசாங்கு பண்றேளான்னும் தெரியலை. ஆனா ஒண்ணு – இவ்வளவு பெரிய கடன் பாக்கி நிக்கறதுக்கு பாதிக் காரணம் வாரிக் குடுத்த பாங்குகள்ங்கறதுல சந்தேகம் இல்லை. அவா உங்களுக்கு இன்னும் குடுத்திருந்தாலும் வேண்டாம்னா சொல்லிருப்பேள்? நீங்க அதையும் வாங்கிண்டு நஷ்டத்தை 18000 கோடிக்குக் கொண்டு வந்திருப்பேள். அப்பயும் பாங்க் பட்ட நஷ்டத்துக்கு பாங்க் காரணமே இல்லைன்னா சொல்றது? இப்ப ஏற்பட்ட நஷ்டத்துக்கு பாங்கும் உண்டான பொறுப்பை ஏத்துக்கணும். அதோட உங்க கம்பெனிக்காக பாங்க்க யாராவது ஆட்டி வச்சிருந்தா அவாளுக்கும் பொறுப்பு உண்டு. ஆனா சட்டப் படியோ தார்மிகப்படியோ உங்க பொறுப்பு குறையவே குறையாது.

’நீங்க வேற, உங்க கம்பெனி வேற. கடன் வாங்கினது நீங்க இல்லை, உங்க கம்பெனிதான்’கற சட்ட விஷயம்லாம் இருக்கட்டும். நீங்க கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனி தலைமைல இல்லேன்னா பாங்குகள் இந்த அளவுக்கு அதுக்குக் கடன் குடுத்து நஷ்டப் பட்டிருக்காது. மல்யா மாதிரி ஒரு கைகாரர் கேட்டாத்தான் அவாளும்  யோசிக்காம மலையளவுக்கு கடன் குடுப்பா. இல்லேன்னா இதே மாதிரி நிறைய பேருக்கு நிறையக் குடுத்து பாங்குகளே திவால் ஆயிருக்கணுமே?

கடன் உங்க கம்பெனி வாங்கினாலும் உங்க மவுசுலதான் அது நடந்தது. உங்க மவுசு ரொம்பப் பெரிசுன்னு முன்னாள் பிரதம மந்திரி ஒருத்தர் இருக்காரே, தேவ கவுடா மாமா, அவருக்கு நன்னாத் தெரியும்.  9000 கோடி பாக்கிக்கு உங்க மேல பாங்க் நடவடிக்கை வரப்போறதுன்னு நியூஸ் வந்த உடனே மனுஷர் போட்டார் ஒரு போடு.  “கடன் வாங்கித் திருப்பித் தாராம மத்தவங்க இருக்கும்போது மல்யாமேல மட்டும் எதுக்கு நடவடிக்கை?”ன்னு கேட்டிருக்கார். அதாவது, “நடவடிக்கை எடுத்தா எல்லாக் கடனாளிகள் மேலயும் ஒரே நாள்ள எடுங்கோ. ஒவ்வொருத்தரா ஆரமிச்சா மத்தவா  மேல முடிச்சுட்டு கடைசியா மல்யா கிட்ட வாங்கோ”ன்னு சொல்ல வரார்.  பிரதம மந்திரியா இருந்த ஒருத்தர் “மல்யா மேலயும் சம்பத்தப் பட்டவா மேலயும் கடன் பாக்கி தொடர்பா எல்லா நடவடிக்கையும் எடுக்கணும். அதோட, பெரிய அளவுல பாங்க் கடன் வாங்கி அடைக்காத மத்தவா மேலயும் வசூல் நடவடிக்கை வரணும்”னு பேசினா நன்னா இருக்கும்.  அதை விட்டுட்டு உங்கள தாங்கிப் பிடிக்கறா மாதிரியே பேசறாரே! நீங்களும் சரி அவரும் சரி, ஏதோ 'கொடுத்து வச்சவா'ளாத்தான் இருக்கணும்.

அரசியல்னா பதவி முக்கியம். தொழில்னா லாபம் முக்கியம். அதெல்லாம் மாத்த முடியாது.  ஆனா அரசியல் வழிமுறைகளையும் தொழில் நடத்தைகளையும் சட்டமும் தார்மிகமும் சேர்ந்து சரியா கட்டுப் படுத்தலைன்னா பதவி ஆசையும் லாபக் கணக்கும் நாசத்தைக் கொண்டு வரும்.  உங்க விஷயத்துல அதான் நடந்திருக்கு. இதுல தார்மிகம் விழுந்திருக்கு. சட்டம் எழுந்து நிக்கறதான்னு பாக்கணும்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016

7 comments:

  1. Alasal by Ambujam Patti is very great. My compliments to her and congratulations to the author.Very relevant, honest and truthful useful alasal.

    ReplyDelete
  2. Reminds me of reading Kumudam of better days Good and humorous but effective
    Narasiah

    ReplyDelete
  3. Very superficial view of the entire la affair Kingfisher airlines! This article appeals only to the uninitiated person.
    The woes of airline industry and the downfall of at least five airlines in India in the past two decades is not factored in the piece. What about Air India which lost 30,000 Cr which will be compensated by tax money?

    Equally, at least five banks have gone defunct; take the erstwhile Global Trust Bank or Bank of Punjab. So it is not a balanced perspective but only a possibly simplistic view that caters to lay public! Sad!

    ReplyDelete
  4. Yes. I feel uninitiated. It requires great intellectual acumen to justify mallya, citing so many other failures.

    ReplyDelete
  5. Ambujam paatti "alasal" is full of facts intertwined with humour. Enjoyed reading.

    ReplyDelete