Thursday 20 August 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : சுந்தர் பிச்சை! உங்கிட்ட ஒண்ணு ரண்டு வார்த்தை



ஏண்டாப்பா, ’கூகிள்’ள பெரிய ஆபீசர் ஆயிட்டியாமே? அமெரிக்காவில நீதான் இப்ப கம்பெனி சி.இ.ஓ-ன்னு பாத்தேன். நன்னா இருடாப்பா!

எங்கயுமே கம்பெனி நிர்வாகத்துல மேல மேல வரதுங்கறது ஈஸி இல்லையே?  நன்னா படிச்சிருந்தா மட்டும் போறாது.  குடுத்த வேலைய நன்னா பண்ணத் தெரிஞ்சா மட்டும் போறாது.  குடுக்காத வேலையையும் கொஞ்சம் எடுத்துப் பண்ணணும். அதுவும் போறாது. கூட வேலை செய்யறவாட்ட, உனக்கு கீழ வேலை பண்றவாட்ட, மேல் அதிகாரிகள்ட்ட நீ எப்டி எப்டி பழகற, நடந்துக்கறங்கற நெளிவு சுளுவு சமாசாரமும் இதுல நிறைய இருக்கு. இதெல்லாம் வீட்டுக்குள்ள நடக்கற மாதிரித்தான்.  எப்டிச் சொல்றேன்னு கேளு.

அந்தக் காலத்துல எங்கள்ள சிலர், குடும்பத்துல எப்படிப் பேர் எடுத்தோம் தெரியுமோ? சமயல் பண்றதுக்கு விறகடுப்பு, குமுட்டி, அம்மி, ஆட்டுக்கல்லோட போராடணும். சாப்பாட்டு வேளைன்னா, குழம்பு ரசம் காய்கறியோட அப்பப்ப அப்பளாமும் பொரிக்கணும், வடாமும் வறுக்கணும் - அதையும் முன்னாலயே இட்டு பிழிஞ்சு காயவச்சு எடுக்கணும். ஸீஸன்போது மாவடோட மல்லுக் கட்டணும். ரொம்ப முக்கியமா, எல்லார்ட்டயும் அனுசரணையா இருக்கணும், வாஞ்சையாப் பேசணும். ஆத்துக்காரரைக் கவனிக்கணும், மாமியாரை சமாளிக்கணும், மச்சினரை மதிக்கணும், நாத்தனாருக்கு ஈடு குடுக்கணும், சொந்தக்காராள விசாரிக்கணும், அடுத்த வீட்டுக்காராட்டயும் பேச்சு வச்சுக்கணும். அப்பறம் குழந்தைகளயும் வளக்கணும், கல்யாண வேலைக்கும் ஓடணும், ப்ரசவத்தையும் பாக்கணும். இத்தனைக்கு நடுவுலதான் எங்கள்ள சில மனுஷிகள் கால் காசு சம்பளம் வாங்காம பேர் மட்டும் வாங்கிருந்தான்னா, அதுவும் கம்பெனி சி.இ.ஓ ஆற மாதிரித்தான். ஆனா இப்பல்லாம் பொண்கள் வெளி வேலைலதான் பேர் வாங்க வேண்டிருக்கு – சந்தோஷம். அதெல்லாம் இருக்கட்டும். முக்கியமா இன்னொரு விஷயம் உங்கிட்ட சொல்லணும்னு நினைக்கறேன்.

இந்தியாவில ஸ்கூல் காலேஜ் போன ஒர்த்தர் அமெரிக்காவுக்குப் போய் இன்னும் படிச்சு, ப்ரசித்தியான கூகிள் கம்பெனில வேலைக்குச் சேந்து,  அங்க வேலை பண்ற வெள்ளக்காராளுக்கும் மேல எழும்பி, சி.இ.ஓ ஆகறதுங்கறது இந்தியாக்காராளுக்கு – மத்தவாளுக்கும்தான் - பிரமிப்பான விஷயம். நீ தமிழன்கறதுனால தமிழ்நாட்டுலேர்ந்து வந்தவா உன்னை இன்னும் விசேஷமாப் பார்ப்பா. ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருப்பா – இது ஒன்னோட தனிப்பட்ட மஹா வெற்றியா மட்டும்தான் இப்ப இருக்கு.  இதுக்குக் கொஞ்சம் மெருகு சேத்து, இந்தியாக்காரா உன்னோட வளர்ச்சியை ப்ரமிப்பா மட்டும் பாக்காம பெருமையாவும் நினைக்கறா மாதிரி பண்ணமுடியுமான்னு பாரேன். எந்த அர்த்தத்துல சொல்றேன்னா, இப்ப உன் பெரிய படிப்பும் அதிக சம்பாத்தியமும் உனக்கு மட்டும்தான் பிரயாஜனப் படறது.  அது தப்புல்லதான்.  ஆனா அதுல பெருமையும் இல்லையேப்பா!

இந்த நிலைமைக்கு வர நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பயோ அதுல அரைக்கால் பங்குக்கும் குறைவா கஷ்டத்தை எத்துண்டா போதும் – உனக்கு உண்டான பெருமை ஓடி வரும். உதாரணமா, இந்தியாவுல படிக்க வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு நீ எந்த வகைல, எந்த இடங்கள்ள, எந்த அளவுக்கு வழி பண்ண முடியும்னு யோசிக்கலாம். அல்லது இந்தியாவுல பண்றதுக்கு வேற நல்ல காரியங்களும் உனக்கே தோணலாம் – இங்கதான் பரோபகாரத்துலயே ஜனங்கள் வாழற அளவுக்கு அரசாங்கம் குறட்டை விட்டிண்டிருக்கே! இன்னொண்ணு - கூகிள், மைக்ரொஸாஃப்ட் மாதிரி கம்பெனிகள்ள ஷேர் வச்சிருக்கற முதலாளிகள் அளவுக்கு உனக்கு வருமானம் கிடையாதுதான். இருந்தாலும், இந்தியாவில நீ அணில் அளவுக்குப் பண்ணினாலும் உனக்குக் கோடு விழும். ஏற்கனவே நீ எதாவது பண்ணிண்டிருக்கையா, அதக் கொஞ்சம் சாமர்த்தியமா பிரபல்யப் படுத்தறது நல்லது.

சில பேர் கேக்கலாம்; ”வெளி நாட்டுக்குப் போய் வண்டி வண்டியா சம்பாதிக்கும் போது, தான தருமம் பண்ணினாத்தான் என்ன?” ன்னு. அப்டிக் கேக்கறவாள்ள முக்கால்வாசிப் பேர் சோம்பேறிகள், பாக்கிப் பேர் வறட்டு மனசுக்காரா. அந்த மாதிரி நினைப்பு எனக்குக் கொஞ்சம் கூட இல்லாதது பகவான் கிருபை.
 
பாரு, மத்தவாளுக்குப் பிரயோஜனம் ஏற்படுத்தினாத்தான் அவா மனசுலேர்ந்து மதிப்பும் மரியாதையும் கலந்து உனக்குப் பெருமையா வந்து சேரும். அது உன்னைச் சேரணும்னு நினைக்கறேன். கூகிள் கம்பெனி சி.இ.ஓ-ன்னு ஒரு மகுடம் கிடைச்சதுக்கு அப்பறம் நீ பரோபகாரம் பண்ணும்போது அந்த நல்ல காரியத்துக்கு ஒளி அதிகமாக் கிடைக்கும். கூகிள் தன்னோட காரியங்களைச் செய்யறா மாதிரி, நீயும் பண்ண முடிஞ்ச உபகாரத்தை சரியானதா தேர்ந்தெடுத்து, அதைப் பேஷா நல்ல விதமாப் பண்ணணும்னு உனக்கு யாரும் சொல்லவேண்டாம். 

  நீ கைங்கர்யமா நல்ல காரியம் பண்றேன்னு பரவலா தெரிஞ்சதுன்னா, உன் அளவுக்கு சம்பாத்தியத்துல முன்னுக்கு வந்த அல்லது வரப்போற இந்தியாக்காராளும் உன்னைப் பாத்து அதிகமா நல்ல காரியங்கள் பண்ணலாம். இந்த விஷயத்துல நீ தலைக் காவேரியா இருக்கலாம்.  பிரவாகம் பின்னால மெள்ள மெள்ள சேரட்டும்.  பாட்டி வேற என்ன சொல்ல முடியும்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

3 comments:

  1. ஆயிரத்திலே ஒரு வார்த்தை பாட்டி! ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்!-பாட்டி,அப்பிடியே சுந்தர் பிச்சை காதிலே,சேவாலயா பத்திகொஞ்சம் போட்டு வெக்கறது!மெயில் ஐடி தெரியுமோன்னோ?
    www.sevalaya.org

    ReplyDelete
  2. பிச்சை தமிழ் படிப்பார் என்று நம்புகிறேன். கட்டாயமாக ஆவிற்கு லிங்க் அனுப்பவும்.

    ReplyDelete
  3. A good write-up on reservation. The government and the potential beneficiaries have lost sight of the intention of the framers of the Constitution. Reservation was expected to be a temporary measure. Its non- or ineffective implementation for more than sixty years and abuse for vote-bank politics combined with the lackadaisical approach by the judiciary has kept it alive so far. Reservation is not just 50 per cent. Add to this the reservation for SCs and STs. Reservation makes no sense now, under globalization. What we must do is turn the society into an Opportunity Society. Are there any takers for this? Thanks for spending your time and resources on this burning issue, which is already a gangrene in our body politic. I am glad the demand for NO Reservation or Make all SLAVES of reservation [very sensible wordings!] has come from Patels, Patels, and Patels, in Gujarat through mass mobilization by a young man, all of 22 years. The hidden agenda may be to unsettle the Modi regime, and the Trojan horse may be Amit Shah himself! That is Indian politics. Anyway, such mass mobilization is impossible in a state like Tamil Nadu. Even the anti-liquor agitation had a short life there.

    ReplyDelete