Saturday 20 June 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : ஏண்டிம்மா, இது நன்னாவா இருக்கு?




ஒம் பேர் லிபிகான்னு பேப்பர்ல பாத்தேன்.  உங்க ஆத்துக்காரர் – அதான், ஆம் ஆத்மி கட்சி சோம்னாத் பார்தி – மேல நீ விலாவாரியா குற்றப் பத்திரிகை வாசிச்சதை பேப்பர்காரா அச்சடிச்சு ஊர் பூரா வினியோகம் பண்ணியாச்சு.  நீ கண் கலங்கின ஃபோட்டோவையும் போட்டு ஒங்காத்து நியூஸை நன்னா பரப்பியாச்சு.

புருஷன் பொண்டாட்டிக்குள்ளா இப்டி மனஸ்தாபம் வந்திருக்க வேண்டாம். வந்துட்டாலும் விஷயத்தை நீ இப்டி சந்திக்கு இழுத்திருக்க வேண்டாம்னு நினைக்கறேன்.

ஒரு புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு ரீதில இணக்கமா இருக்கலாம், கொண்டாடலாம். ஒரு வீட்டுக்குள்ள நடக்கறதைக் கேட்டுட்டு - அதுவும் ஒருத்தர் மட்டும் பேசறதைக் கேட்டுட்டு - மத்தவா ரைட்டு தப்புன்னு எப்டி ஜட்ஜ்மெண்ட் குடுக்க முடியும்? ஆனா ஒரு விஷயத்தை எல்லாரும் ஒத்துப்பா : ஒர்த்தரை மத்தவர் சும்மா காயப்படுத்திருந்தா அது எல்லார் ஆத்துலயும் தப்புதான்.

ஒனக்கும் பார்திக்கும் ஏற்பட்ட பிரச்சனைல யார் பக்கம் நியாயம் இருக்குன்னு யாருக்குடிம்மா தெரியும்?  நீயோ அவரோ மீடியாக்காராளக் கூப்டு அழுகைக் கச்சேரி வச்சாலோ, சிரிச்ச மூஞ்சியா எதிர்ப் பாட்டு பாடினாலோ அதை வச்சு மத்தவா என்ன தீர்மானம் பண்ண முடியுங்கற? நீ பொருமிண்டு ஒன் ஆத்துக்காரரைக் குத்தம் சொல்றதும், பதிலுக்கு அவர் உருகிண்டு “நான் இப்ப கடலோரத்துல உலாத்தப் போறேன். இந்த நேரத்துல லிபிகா என்னோட இருந்தா அற்புதமா இருக்குமே”ன்னு ட்விட்டர்ல தட்டி விடறதும் கேக்கறவாளுக்கு பொழுதைப் போக்கும். அதுக்கு மேல அவாளுக்கு ஒண்ணும் புரி படாது. ‘யார் என்னத்துக்கு நடிக்கறாளோ, நமக்கென்ன தெரியும்’னுதான் அவா உள்ளுக்குள்ள நினச்சுப்பா.  இல்ல, பொண்கள்ள சில பேர் நீ பேசறதையும் ஆண்கள்ள சில பேர் அவர் சொல்றதையும் ட்க்குனு நம்பலாம்.  அதுனாலயும் உங்க ரண்டு பேருக்கும் பிரயோஜனம் இல்ல.

“டெல்லி முதல் மந்திரி என்னை நேர்ல அழைச்சு என் குறையக் கேக்கலயே”ன்னு நீ அலுத்துண்டதும் அர்த்தமில்ல. அரவிந்த் கேஜ்ரிவால்தான் என்ன பண்ணமுடியும்? ஒன்னைப் பாத்தார்னா ஏதோ ஞாபகத்துல, “குழந்தைகளோட கிளம்பி டெல்லி ராஜ்பத் வீதில பாயை விரிச்சுப் படுத்துண்டு மத்திய அரசாங்கத்துக்கு எதிரா தர்ணா பண்ணுங்கோ”ன்னு கூட கன்னா பின்னா அட்வைஸ் குடுத்துடலாம். அவராலயும் ஒன் ப்ரப்ளம் தீரப்போறதில்ல.       

நீ, பார்தி ரண்டு பேரும் படிச்சவா. எப்டி சந்தோஷமா குடும்பம் நடத்தணும், இல்ல உங்களால அது முடியுமான்னு மூணாம் மனுஷா சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்ல – பிறத்தியார் மூலமா அது நடக்கற காரியமும் இல்ல. பிரியத்தான் வேணும்னா நீ கோர்ட்டுலதானம்மா பாத்துக்கணும்? கேமரா மைக் வச்சுண்டு “முன்னால இது நடந்தது”ன்னு நீ இப்பப் பேசறது கேஸூக்கும் உதவாதே?

’கேஸூக்கு இல்லாட்டாலும் பப்ளிக்கா அவர் மானத்த வாங்கின திருப்தியாவது எனக்குக் கிடைக்கட்டும்’னு நீ நெனச்சா அதெல்லாம் அல்ப திருப்திம்மா. உன் சந்தோஷத்துல உனக்குக் கெடைக்கற திருப்திதான் சாஸ்வதம். இன்னொருத்தர் துக்கத்துல நீ பெரிசா திருப்தியைத் தேட முடியாது.  யார் அந்த வழில போனாலும் ‘நான் அவாளுக்குக் குடுத்த துக்கம் போறுமா, இல்ல இன்னும் கொஞ்சம் குடுக்கணுமா? முந்தி குடுத்த துக்கம் அவாட்டேர்ந்து விலகிப் போய்ட்டா நான் அடுத்த டோஸ் துக்கத்தை ரெடி பண்ணணுமே’ங்கற நெனைப்புலதான் இருப்பா. இதுல ஒரு திருப்தியும் இல்ல.

ஏதோ பார்திக்குப் பரிஞ்சுண்டு இப்டிப் பேசறேன்னு நெனச்சுக்காத. அவர்மேல குத்தம் இருக்கா, இருந்தா அது எவ்வளவுன்னும் எனக்குத் தெரியாது. ஆனா உன் கண்ணியத்தையும் உங்கிட்ட இருக்கற குழந்தைகளோட அமைதியான எதிர்காலத்தையும் காப்பாத்த வேண்டியது ஒன் பொறுப்பு.   நீ ஒங்க ஆத்துக்காரரோட சேர முடிஞ்சாலும் சரி, தனியாத்தான் வாழணும்னாலூம் சரி, நீ கண்ணியமா இருக்கறதுதான் ஒனக்குப் பெரிய துணையா இருக்கும்னு எனக்குத் தோண்றது.

புருஷனோட வாழ முடியலைன்னு அமைதியா பிரிஞ்சு போய் – டைவர்ஸ் வாங்கிண்டு கூட – அவா பாட்டுக்கு நிம்மதியா வாழ்க்கை நடத்தறவா நிறையப்பேர் ஒனக்கே தெரிஞ்சிருக்கும்.  விலகறதுலயும் கண்ணியத்தோட விலகினவா அவா.  இன்னொரு பக்கக் கதையையும் பாரு. 

அமெரிக்க ஜனாதிபதியா இருந்த பில் கிளிண்டன் சொந்த வாழ்க்கைல தப்புப் பண்ணினார்னு உலகத்துக்கே தெரிஞ்சது, அவர் சகதர்மிணி ஹில்லரி கிளிண்டன் அதைச் சட்டை பண்ணாம வாழ்க்கையத் தொடர்ரதுதான் தனக்கு ஏத்ததுன்னு முடிவெடுத்தா. ரொம்ப நாளைக்கு, தன் ஆத்துக்காரர் தப்பைப் பத்தி அவர் பொதுவுல குறையாப் பேசலை, கண்டனம் பண்ணலை.  பின்னால பேட்டி எடுக்கறவா எப்டிக் கேட்டாலும் அது ஏதோ நேர்ந்ததுன்னு சொல்லி அவரை மன்னிச்சுட்டேங்கற பேச்சோட விஷயத்தை முடிச்சுண்டுட்டா.  அந்த வகைல ஹில்லரி மாமி இன்னி வரைக்கும் கண்ணியத்தை விட்டுக் குடுக்கலை.  அடுத்த ஜனாதிபதி தேர்தல்ல அவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரா வரலாம்கற அளவுக்கு தன்னோட கண்ணியத்தைக் காப்பாத்திண்டிருக்கா.  அவரோட தனிப்பட்ட சங்கடம் பத்தி மீடியாவோட ஆர்வத்துக்குத் தீனி போடாம அவர் காட்டின மௌனமும் அதுக்குக் காரணம். 

பார்தியோட சேர்ந்து வாழணுமா வேண்டாமான்னு உனக்குத்தான் தெரியும், நீ தான் முடிவு பண்ணணும். இனிமே பொதுவுக்கு வராம நீ யோசிச்சு முடிவு பண்ணி நடந்துக்கோம்மா. நீ பொழைச்சுக்கோ. மீடியாக்காரா பொழைக்க வேண்டாம்.  சரி தானடிம்மா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

2 comments:

  1. very correct , but may not be accepted by many . Political parties increase the flame between the couple who should understand that they are being used as pawns in the game .

    ReplyDelete
  2. நன்னாச் சொன்னேள் பாட்டி! ஆனா அவ இதையெல்லாம் காதிலே போட்டுக்கறாப்பல இல்லே? யார் தூண்டி விட்டாளோ, எதுக்காகத் தூண்டி விட்டாளோ? மீடியாவுக்கு அடுத்த ‘உடக்கற செய்தி” வந்தா இது தீந்து போச்சு, அவ்வளவுதான்!

    ReplyDelete