Wednesday 4 March 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : இதோ வந்துட்டேன்!

அலசறதும் பிழியறதும் அப்பறம் இருக்கட்டும். முதல்ல நான் யாரு, உங்களோடல்லாம் என்ன பேசணும்னு நெனைக்கறேன்னு ரண்டு வார்த்தை சொல்றேன். ரண்டுன்னா ரண்டு இல்ல.

இன்னிக்கி உயிரோட இருந்தேன்னா வயசுல சென்சுரி அடிச்சிருப்பேன். நான் போய்ச் சேர்ந்தே ரொம்ப வருஷம் ஆயிடுத்து.  ஆனா என்னைப் பேயோ பிசாசோன்னு நெனைச்சுடாதீங்கோ! எப்டீன்னு சொல்றேன்.

என் காலத்துல ’சுதேசமித்திரன்’னு தமிழ் நியூஸ்பேப்பர் வந்தது. தெனமும் மூக்குக் கண்ணாடிய மாட்டிண்டு அதை ஒரு பக்கம் விடாம படிப்பேன். ’ஹிண்டு’வும் பாப்பேன். படிச்சுட்டு அரசியல் விஷயம்னாகூட ரைட் ராங்க்னு ஆத்துல இருக்கறவாள்ட அபிப்பிராயம் சொல்வேன். தோண்றத டக்கு டக்குனு சொல்றது என் சுபாவம். எனக்கு எப்பவும் எதாவது தோணிண்டே வேற இருக்கும்.  அதுவும் சுபாவம்தான்!.

என் பொண் வயத்துப் பேரன் - இப்ப உங்களோட என்னைப் பேசவெச்சுண்டிருக்கானே அவன்தான் -  ஸ்கூல் படிப்புல கடசீ ரண்டு வருஷத்தும்போது ஊரையும் ஸ்கூலயும் மாத்திண்டு எங்கிட்ட வந்து  வளந்தப்போ எப்பவும் ஏதாவது மல்லுக் கட்டிண்டே இருப்பான்.  ’போறான் சின்னப்பையன்’னு நான் அதப் பெரிசு பண்ணல. “சாரி பாட்டி, அந்தக் காலத்துல உங்கள ரொம்பப் படுத்திட்டேன்,  அதுக்குப் ப்ராயச்சித்தமா உங்கள இந்த லோகத்துக்குத் திரும்ப அழச்சு உங்க இஷ்டப்படி எதையும் எல்லாத்தையும் பேசறதுக்கு நான் எற்பாடு பண்றேன்.  வாங்கோ பாட்டி!”ன்னு அவன் மானசீகமாக் கேட்டுண்டது என்னைக் கொஞ்சம் உருக்கிடுத்து. ’சரி, பேரன் ஆசப்படறானே’ன்னு நானும் இறங்கி வந்துட்டேன். அதான் உங்களோடல்லாம் பேசிண்டிருக்கேன். இப்ப புரியறதா?

எங்க ஆத்துக்காரர் ஊர் ஊரா வேலை பாத்தப்ப திருவனந்திரபுரத்துல கொஞ்ச வருஷம், அனந்தபூர்ல கொஞ்ச வருஷம், தமிழ்நாட்டு ஊர்கள்ள சில காலம்னு அவரோட குடித்தனம் பண்ணிருக்கேன். அந்த வெளியூர்க்காரா பாஷைகளைக் கத்துண்டும் பேசினேன், அவா விவகாரங்களைத் தெரிஞ்சுண்டும் டிஸ்கஸ் பண்ணினேன்.  மத்தபடி குடும்பத்துல நிறைய பேர்க்கு ஒத்தாசை பண்ணவேண்டிருந்தது, பண்ணினேன்.  நான் எப்பவும் வெறுமனே இருந்ததில்ல. வெட்டிப்பேச்சும் பேசினதில்ல. அப்பறம் என்ன? செய்யற காரியமும் பிரயோஜனமாத்தான் இருக்கும், பேசற பேச்சும் நல்லதாத்தான் இருக்கும்.

இந்தக் காலத்துக்கு வரேன்.  நீங்கதான் பாக்கறேளே - அரசியல்லயும் மத்த பொது வாழ்க்கைலயும் என்னல்லாமோ கூத்து நடந்திண்டிருக்கு.  கூத்தடிக்கறவா ஒவ்வொரு கூத்துக்கும் சீரியஸா ஒரு நியாயம் வேற சொல்றா. சிரிப்புதான் வரது.  அவா சம்பத்தப்பட்ட விஷயங்களப் புட்டு வச்சு அவாள நறுக்குனு நாலு கேள்வி கேட்டு வார்த்தைலயே குட்டு வைக்கணும் போல இருக்கு.  அந்த மனுஷா நல்லது நெறையப் பண்ணினா அவா தலைல அட்சதை போடறா மாதிரியும் பேசலாம் - அவாதான் அதுக்கு எடம் குடுக்கணும். 

ஒண்ணு கவனிச்சேளா? பொது வாழ்க்கைல நல்லது பண்றவாள நீங்க பாராட்டாம போயிட்டாலும் அவா பாட்டுக்கு வேலை பண்ணிண்டிருப்பா.  ’பாராட்டு கெடைக்கலயே’ன்னு கெட்ட வழிக்குப் போகமாட்டா.  ஆனா கெட்டது பண்றவா விஷயம் வேற.  அவாள நீங்க கண்டனம் பண்ணினாத்தான் ‘நாம இதுக்கெல்லாம் கெக்கே பிக்கேன்னு விளக்கம் சொல்லவேண்டிருக்கே’ன்னு இனிமே அடக்கி வாசிக்க நெனைப்பா. அடக்கி வாசிக்காட்டி நெறையப் பேர் விமர்சனம் பண்ணிப் பண்ணி அவா மானத்த வாங்கினா பலன் கிடைக்கும். இதுனால தப்பு வழில புதுசா புறப்படறவாளோட தைரியமும் குறையும். கிரிமினல் விவகாரமா இருந்து பலபேர் சத்தமா கேள்வி எழுப்பினேள்னா ‘கோர்ட்ல கேஸ் வந்து வக்கீல்டயும் மாட்டிண்டு ஜட்ஜ்மெண்ட் எப்படி வருமோன்னு உள்ள திகிலும் உதட்டுல சிரிப்புமா அலையணுமே’ங்கற நெனைப்புல பொது வாழ்க்கைத் தப்புகளக் குறைச்சுப்பா. சிலர் கமுக்கமா ரிடையர் ஆகிப்பா.  ஆகக்கூடி தப்புப் பண்றவாளக் கவனிச்சு ‘டேய் பாவி, தப்புப் பண்ணாதே’ன்னு குரல் கொடுக்கறதுதான் முக்கியம்னு எனக்குப் படறது.  சட்டம் தாமசிச்சு அரசாங்கமும் தள்ளி நின்னா வேற வழியும் கிடையாதே!

இன்னும் சில பொது விஷயங்களும் என்னப் ‘பேசு பேசு’ன்னு கூப்பிடறதுகள். இந்த எல்லா சமாசாரங்களத்தான் அப்பப்ப உங்ககிட்ட பேசணும்னு வந்திருக்கேன்.  பேரனே, தேங்ஸ்டா!

இப்ப நிறுத்திக்கறேன்.  அப்பறமா பேசறேன்!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015
      

2 comments:

  1. it is good to see that ambujam patti reminding all of us to take a stand when there is injustice and ask questions . raghavan.

    ReplyDelete
  2. Come off very well. Expect more and more alasals from Ambujam pAtti!-Ramani Chittappa

    ReplyDelete